வீடுகளுக்கு முன் கழிவு நீரை பள்ளத்தில் தேக்கும் அவலம்
உத்தமபாளையம்: சாக்கடை வசதி இல்லாதததால் வீடுகளுக்கு முன் பள்ளம் தோண்டி கழிவுநீரை தேக்கி இரவில் சுமந்து செல்லும் அவல நிலை கோகிலாபுரம் ஊராட்சியில் தொடர்வதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.உத்தமபாளையம் ஒன்றியம், கோகிலாபுரம் ஊராட்சி 9 வார்டுகளை கொண்டது. இங்கு 5 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். விவசாயத்தை முழுமையாக கொண்ட ஊராட்சியாகும். இவ்வூராட்சியில் பெரும்பாலான தெருக்கள் நடந்து செல்ல லாயக்கற்றதாகி குண்டும் குழியுமாக உள்ளது. சின்ன ஒவுலாபுரம் செல்லும் ரோட்டில் திடக் கழிவு மேலாண்மை கூடம் அமைக்கப்பட்டது. அதன் பயன்பாடு இன்றி மதுபாராக பயன்பட்டு வருகிறது. இங்குள்ள மண்புழு தயாரிப்பு கூடாரம் சரிந்து விழுந்துள்ளது. கிழக்கு தெரு ஆனைமலையன்பட்டிக்கு செல்லும் பிரிவில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சாக்கடை வசதி இல்லை.எனவே வீட்டிற்கு முன் பள்ளம் தோண்டி கழிவு நீரை தேக்குகின்றனர். தினமும் இரவில் கழிவு நீரை வாளிகளில் நிரப்பி வாய்க்காலில் கொட்டும் அவலம் தொடர்கிறது. இப்பகுதி மக்கள் சாக்கடை வசதி கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இங்குள்ள 7 கழிப்பறைகளும் பயன்பாட்டில் இருந்தாலும் பராமரிப்பின்றி உள்ளது. தெருவிளக்குகள் பழுதானால், மீண்டும் சீரமைக்க கால தாமதம் ஆகும். இங்கு பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட போலீஸ் புறக்காவல் நிலையம் பயன் இன்றி காட்சி பொருளாக மாறி உள்ளது. கோகிலாபுரம் வழியாக சுருளி அருவி, ராயப்பன்பட்டியில் உள்ள 3 மேல்நிலைப்பள்ளிகளுக்கும் மாணவ மாணவிகள் செல்கின்றனர். கோகிலாபுரம் ஊருக்குள் நெடுஞ்சாலை செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஊராட்சி அலுவலகத்தில் இருந்து ஆனைமலையன்பட்டிக்கு வயல் வழியாக ரோடு அமைக்கவும், முல்லையாற்றில் பாலம் கட்டினால் உத்தமபாளையம் பைபாஸ் ரோட்டை எளிதாக அடையலாம் என பொதுமக்கள் கோரி வருகின்றனர். ஊராட்சி அலுவலகத்தில் உள்ள நூலகம் திறப்பதே இல்லை. ஊராட்சி அலுவலகத்தின் காம்பவுண்ட் சுவர் இடிந்த நிலையில் உள்ளது. பைபாஸ் ரோடு அவசியம்
பெருமாள், முன்னாள் ஊராட்சி தலைவர்: அடிப்படை வசதிகளில் முக்கிய பணியாக வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். பஸ் நிறுத்தத்தில் தினமும் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே ஆனைமலையன்பட்டிக்கு பைபாஸ் அமைக்க வேண்டும். கழிப்பறைகளை தினமும் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருவிளக்குகள் போதிய வெளிச்சம் இல்லாமல் உள்ளது. 'ஜல் ஜீவன்' திட்டத்தில் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும். சாக்கடை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். போதிய பொது கழிப்பறைகள் இல்லை
ஈஸ்வரன், விவசாயி, கோகிலாபுரம்: கிழக்கு தெருவில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி 15 ஆண்டுகளாக வசிக்கிறோம். வீடுகளுக்கு முறையாக வரி செலுத்துகிறோம். ஆனால் இத் தெருவிற்கு சாக்கடை வசதி செய்து தரவில்லை. ஜல் ஜீவன் திட்டத்தில் புதிய இணைப்பு வழங்கவில்லை. ஏற்கனவே இணைப்பு இருப்பதால் அதையே பயன்படுத்துகிறோம். போதிய எண்ணிக்கையில் பொதுக் கழிப்பறைகள் இல்லை. கழிப்பறைகளை பராமரிக்க வேண்டும். பல வீதிகள் நடக்க முடியாத நிலையில் உள்ளது. வீதிகளை பராமரிக்க ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். டெபாசிட் செலுத்த மறுப்பு
இது தொடர்பாக ஊராட்சியில் விசாரித்த போது, 'திடக்கழிவு மேலாண்மை கூடம் துாரமாக இருப்பதால் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் தனியாருக்கு சொந்தமான இடமாகவும் உள்ளது. எனவே இறகு பந்து கிரவுண்ட் அமைத்து விட்டனர். குப்பை கிடங்கிற்கு வேறு இடம் தாசில்தாரிடம் கேட்டுள்ளோம். இப்போதைக்கு குப்பைகளை திராட்சை ஆராய்ச்சி நிலையம் அருகில் கொட்டுகிறோம். ஜல்ஜீவன் திட்டத்தில் டெபாசிட் பணம் ரூ.2 ஆயிரம் செலுத்த மறுக்கின்றனர்.நமது ஊராட்சியின் பங்கு தொகை ரூ.5.20 லட்சம் செலுத்த வேண்டும் இதுவரை ரூ.70 ஆயிரம் மட்டுமே வசூலாகி உள்ளது. வீட்டுவரி ரூ.110 ஜ கட்ட மறுக்கின்றனர். ரூ 92 ஆயிரம் வரை நிலுவை உள்ளது. ஆனால் குறைகளை மட்டும் கூறுகின்றனர்,' என்றனர்.