மேலும் செய்திகள்
கண்மாய் காப்போம் . . .
19-Dec-2024
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், தெப்பம்பட்டி கண்மாய் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின் புதர் மண்டி நீர் தேங்காததால் நீர் பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து மானாவாரி நிலங்களாக மாற்றியுள்ளனர்.மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்துள்ள இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்ற நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. நீர் ஆதாரம் உயர்ந்தால் விவசாயம் மேம்படும் என்ற கருத்தை வலியுறுத்தி இப்பகுதி விவசாயிகள், 1984ல் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபடியே ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு முதல்வராக பொறுப்பேற்ற எம்.ஜி.ஆரிடம் கண்மாய் அமைக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., இப்பகுதியில் கழுகுமலை, மொட்டப்பாறை ஆகியவற்றை இணைத்து சிறு அணை கட்டுவதற்கான நடவடிக்கை துவக்கினார். அடுத்த சில ஆண்டுகளில் அவர் மறைந்ததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டு, பின்னர் கண்மாய் திட்டமாக மாற்றம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது. கண்மாய் அமைத்தபின் தொடர்ச்சியான பராமரிப்பு இல்லாததால் தற்போது கண்மாய்க்கான சுவடே மறைந்து வருகிறது. இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கால்வாய் சுவடுகளே மறைந்து விட்டது
சாமிநாதன், தெப்பம்பட்டி: எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் இப்பகுதியில் சிறு அணை அமையும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு கண்மாய் மட்டுமே கிடைத்தது. மேற்கு தொடர்ச்சி மலை வெள்ளபாறை, வடுவூத்து, 5 கல்ஊத்து பகுதியில் இருந்து மழைக்காலத்தில் கிடைக்கும் நீர் கண்மாயில் தேங்கும். 80 ஏக்கர் பரப்பில் நீர்த்தேங்கினால், நூறுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நேரடி விவசாயம் செய்ய முடியும். கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் கண்மாயிலிருந்து நீர் செல்வதற்கான கால்வாய் சுவடே மறைந்து விட்டது. கண்மாயிலும் பல ஆண்டுகளாக நீர் தேங்காததால் இப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்துள்ளது. பல ஆண்டாக பராமரிப்பு இல்லை
ஆர்.பாண்டிவேல், தெப்பம்பட்டி: கண்மாயில் முழு அளவில் நிரம்பியபின் மறுகால் செல்லும் நீர் ரங்கசமுத்திரம், ஜம்புலிப்புத்தூர் கண்மாய்களுக்கு செல்லும். மலைப்பகுதியில் இருந்து வரும் ஓடை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தடுப்பணைகள் பல இடங்களில் கட்டப்பட்டுள்ளதால் கண்மாய்க்கு நீர் வரத்து பாதித்துள்ளது. கண்மாயில் நீர் தேங்காததால் தேக்கப் பரப்பில் பல ஏக்கரை ஆக்கிரமித்து மானாவாரி நிலங்களாக மாற்றி விட்டனர். தற்போது கண்மாயின் மையப் பகுதியில் உள்ள பள்ளத்தில் மட்டும் நீர் தேங்கி வருகிறது. கண்மாய் கரைகள் முழுவதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. பல இடங்களில் கண்மாய்க்கரை சேதம் அடைந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லை. நிலத்தடி நீர் ஆதாரம் பாதிப்பு
பிச்சைமணி, தெப்பம்பட்டி: கண்மாயில் நீர்த்தேங்கினால் தெப்பம்பட்டி, சேவாநிலையம், மஞ்சிநாயக்கன்பட்டி, சித்தார்பட்டி, எஸ். கதிர்நரசிங்கபுரம், ராஜதானி உட்பட பல கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். கடந்த பல ஆண்டுகளாக கண்மாயில் நீர் தேங்காததால் இப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்துள்ளது. பெரியாறு அணை உபரி நீரை குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து குழாய் மூலம் கொண்டு வந்து ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கண்மாய்களில் தேக்கும் திட்டத்தை நிறைவேற்ற இப் பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடுகின்றனர். அரசின் நடவடிக்கை தான் இல்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் இப்பகுதியில் விவசாயம் அதனை சார்ந்துள்ள கால்நடை வளர்ப்பு தொழில் முற்றிலும் பாதித்துவிடும். கண்மாயில் நீர் தேக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
19-Dec-2024