பெண்கள் சுகாதார வளாகம் கட்டி முடித்து 3 ஆண்டுகளாக திறக்காத அவலம் அடிப்படை வசதிக்கு தவிக்கும் சூலப்புரம் கிராம மக்கள்
போடி: போடி ஒன்றியம், சிலமலை ஊராட்சி முதல் வார்டு சூலப்புரத்தில் பெண்கள் சுகாதார வளாகங்கள் கட்டி முடித்து மூன்று ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாததால் திறந்த வெளியை பயன்படுத்தும் அவல நிலை நீடிக்கிறது. சூலபுரம் முத்தாலம்மன் கோயில் தெரு, மேற்கு, வடக்கு தெரு, நடுத்தெரு, இந்திரா காலனி துதுவல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இக் கிராமத்தில் தெருக்களுக்கான பாதை இருந்தும் பல தெருக்களில் ரோடு வசதி இன்றி குண்டும், குழியுமாக உள்ளன. மெயின் ரோட்டில் விளக்கு வசதி இல்லாததால் இருளில் மூழ்கியுள்ளது. தெருக்களில் குப்பை அகற்றததால் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அடிப்படை வசதி செய்து தர மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. ஊராட்சியில் நிலவும் பிரச்னை குறித்து மக்கள் கூறியதாவது: ரேஷன் கடைக்கு கட்டடம் தேவை
தங்கப்பாண்டி, சூலப்புரம்: முதலாவது வார்டு முத்தாலம்மன் கோயில் கடைசி தெருவில் சாக்கடை வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சிறுகுளம் போல தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசிகொசுக் கடியால் சிரமம் அடைகிறோம். மழைநீருடன் கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் சென்று விடுகிறது. மெயின் ரோட்டில் இருந்து முத்தாலம்மன் கோவில் தெருவிற்கு செல்லும் பாதையில் ரோடு வசதி இன்றி மண் பாதையாக உள்ளது. இதனால் டூவீலர் மற்றும் வாகனங்களில் செல்ல சிரமம் ஏற்படுகிறது. ரேஷன் பொருட்கள் வாரத்தில் ஒருநாள் வழங்கி செல்கின்றனர். ரேஷன் கடை அமைக்க இட வசதி இருந்தும் நிரந்தர கட்டடம் தேவை. சாக்கடை, ரோடு, ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டுமனை பட்டா கிடைக்கவில்லை
பாண்டீஸ்வரன், சூலப்புரம்: மெயின் ரோட்டில் அங்கன்வாடி மையம் சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும் சீரமைக்காததால் பயன்பாடு இன்றி உள்ளது. தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் வடக்கு, தெற்கு தெருவில் பெண்கள் சுகாதார வளாகங்கள் கட்டி முடித்து 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் அரசின் நிதி வீணடிக்கப்பட்டு, முட்புதர்களால் சூழ்ந்துள்ளது. இதனால் பாம்பு, விஷப்பூச்சி உலா வருவதால் அருகே குடியிருக்கும் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். விளையாட்டு மைதானம் அமைக்க இடவசதி இருந்தும் மைதானம் இல்லை.இதனால் மாணவர்கள் மட்டும் இன்றி இளைஞர்களும் விளையாடவும், உடற்பயிற்சி மேற்கொள்ள ஒரு கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது. மேற்கு தெருவில் சாக்கடை வசதி இல்லாததால் தெருவின் நடுவே கழிவுநீர் செல்கிறது. குதுவல் நிலத்தில் (அரசு காலியிடத்தில்) 42 வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். பட்டா கேட்டு வலியுறுத்தியும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை இல்லை. சுகாதார வளாகங்களை பயன் பாட்டிற்கு கொண்டு வரவும் வீட்டுமனை பட்டா வழங்கிட ஊராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருவிளக்கு வசதி தேவை
பிரகாஷ், சூலப்புரம்: சூலப்புரம் மெயின் ரோட்டில் விளக்கு வசதி இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் பெண்கள் இரவில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. நுாலக வசதி இல்லாததால் மாணவர்கள், இளைஞர்கள் தேர்வுக்கு தயாராகவும், புத்தக குறிப்புகளை எடுத்து படிக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். சாக்கடை தூர்வாரததால் கழிவுநீர் தேங்கியுள்ளது. குப்பைகளை அகற்றாமல் தீ வைத்து வருவதால் மக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படுகிறது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து கழிவுநீர் வெளியேற பள்ளம் தோண்டி ஓராண்டாகியும் சீரமைக்காமல் உள்ளது. இதனால் இரவில் பள்ளம் தெரியாமல் வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. தெருக்களை முறைப்படுத்தி சாக்கடை, தெருவிளக்கு, நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.