தேனி சென்டர் மீடியனில் குவியும் மணலால் அவதி மாநில நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்
தேனி : தேனி - பெரியகுளம் ரோட்டில் பல இடங்களில் சென்டர் மீடியனில் மணல் குவிந்து காணப்படுகிறது. இதனை அகற்றாததால் வாகனத்தில் செல்வோர் அவதியடைகின்றனர். தேனி பெரியகுளம் மாநில நெடுஞ்சாலை ரோட்டில் நேருசிலை முதல் அன்னஞ்சி விலக்கு வரை சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோட்டில் சென்டர் மீடியன் இருபுறமும் மணல் தேங்கி உள்ளது. தற்போது காற்று பலமாக வீசும் நேரங்களில் இந்த மணல் டூவீலர்களில் பின் அமர்ந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுகிறது. ஹெல்மட் அணியாமல் டூவீலர்களில் செல்பவர்கள் கண்களில் விழுந்து பலர் தடுமாறுகின்றனர். மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் சில இடங்களில் நகராட்சி சார்பில் மணல் சுத்தம் செய்யப்படுகிறது. ஆனால் பொம்மைய கவுண்டன்பட்டி, ரத்தினம்நகர், ஈஸ்வர் நகர் பகுதியில் சுத்தம் செய்வதில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறையினர் சென்டர் மீடியன் பகுதியில் குவிந்துள்ள மணலை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.