அ.தி.மு.க.,வின் இரட்டை இலைக்கு மவுசு இல்லை தேனி தங்கதமிழ்ச்செல்வன் எம்.பி., கண்டுபிடிப்பு
தேனி : ''அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவிற்கு பின் கண்ணியமிக்க தலைவர்கள் இல்லை. இரட்டை இலைக்கு மவுசு இல்லை.'' என, தேனியில் தங்கதமிழ்செல்வன் எம்.பி., கூறினார். தேனியில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: மத்திய அரசை கண்டிக்கும் வகையில் செப்.20ல் ஓட்டுச்சாவடிகள் அருகே உறுதி மொழி எடுக்க உள்ளோம். த.வெ.க.,விற்கு மட்டும் போலீசார் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை. அனைத்து கட்சிகளுக்கும் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். ஆளுங்கட்சியினருக்கும் அது பொருந்தும். மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் பல திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை. வரும் மாதங்களில் அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். வாக்குறுதியில் கூறாத காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார். அதனால் மீண்டும் அவர் முதல்வர் ஆவார். தேர்தலில் விஜய் தாக்கம் ஏற்படுத்த மாட்டார். அவர் நல்ல நடிகன், ரசிகர்கள் மட்டும் ஓட்டு போட்டால் வெற்றி பெற முடியாது. இந்த தேர்தலில் 4 அணிகள் போட்டியிடும். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு தெரியும். அவர் ஆட்சி காலத்திலும் தேனி மாவட்டத்திற்கு எந்த திட்டங்களும் கொண்டு வரவில்லை. ஜெ., இறந்த பிறகு அந்த கட்சியில் கண்ணியமிக்க தலைவர்கள் இல்லை. இரட்டை இலைக்கு மவுசு இல்லை. பழனிசாமி உண்மையில் தலைவராக இருந்தால் பதவி பறிக்கப்பட்ட செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்த போது கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அவர்கள் ஆட்சியில் செய்த ஊழல் பட்டியல் பா.ஜ.,விடம் உள்ளதால் கண்டனம் தெரிவிக்கவில்லை. சென்னை போடி தினசரி ரயில் இயக்குவது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சரை மீண்டும் வலியுறுத்துவேன். டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர ஏன் மத்திய அரசு மறுக்கிறது., என்றார்.