சாக்கடை தரைப்பாலம் சீரமைக்காததால் அவதி: தேனி 14வது வார்டில் அடிப்படை வசதிக்கு தவிப்பு
தேனி: தேனி நகராட்சி 14வது வார்டு சிவராம் நகரில் இடித்த சாக்கடை தரைப்பாலம் அமைக்கததால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர். தேனி அல்லிநகரம் நகராட்சி 14வது வார்டில் மிரண்டா லைன், சிவராம் நகர் பகுதிகளில் உள்ள 20 தெருக்கள் உள்ளன. சுமார் 300 வீடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வார்டிற்கு உட்பட்ட பல தெருக்களில் சாக்கடையில் மண் மேவி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட சாக்கடை கால்வாய்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. சிவராம் நகரில் சாக்கடை தரைப்பாலம் அமைக்க 4 ஆண்டுகளுக்கு முன் சாக்கடை கால்வாய் அகற்றப்பட்டது. ஆனால், இதுவரை பணி துவக்கவில்லை. நகராட்சி அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு மட்டும் மேற்கொள்கின்றனர். ஆனால், பணி செய்ய மறுக்கின்றனர் என அப்பகுதியினர் குமுறுகின்றனர். சிவராம் நகரில் முன்பு மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்தனர். தற்போது வாரத்திற்கு 2 நாட்கள் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இக் குடிநீரும் குறைந்த நேரம் மட்டுமே வழங்குவதால் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதனால் பலரும் ஆழ்துளை கிணற்று நீரை பருகும் நிலை தொடர்கிறது. இரவில் வாலிபர்கள் சிலர் பைக் ரேஸ் விடும் பகுதியாக தெரு மாறி உள்ளது. போலீசார் இரவில் ரோந்து வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.