விபத்தில் சிக்கிய டபுள் டெக்கர் பஸ் காயம் இன்றி தப்பிய சுற்றுலா பயணிகள்
மூணாறு: மூணாறு அருகே தேவிகுளம் இரைச்சல்பாறை பகுதியில் ' டபுள் டெக்கர்' பஸ் நேற்று விபத்தில் சிக்கிய நிலையில், சுற்றுலா பயணிகள் காயம் எதுவும் இன்றி தப்பினர். மூணாறின் இயற்கை அழகை பஸ்சில் பயணித்தவாறு ரசிக்கும் வகையில் முற்றிலும் கண்ணாடி இழை கொண்டு உருவாக்கப்பட்ட கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பிலான ' டபுள் டெக்கர்' பஸ் சேவை பிப்.8ல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த பஸ் தினமும் பழைய மூணாறில் உள்ள கேரள அரசு பஸ் டொப்போவில் இருந்து காலை 9:00, மதியம் 12:30, மாலை 4:30 ஆகிய நேரங்களில் இயக்கப்படுகிறது. மூணாறில் இருந்து கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆனயிரங்கல் அணையின் 'வியூ பாய்ண்ட்' வரை சென்று திரும்பும். நேற்று டெப்போவில் இருந்து 12:30 மணிக்கு புறப்பட்ட பஸ்சில் 45 சுற்றுலா பயணிகள் இருந்தனர். ஆனயிரங்கல் வியூ பாய்ண்ட் சென்று விட்டு திரும்புகையில், மூணாறு அருகே தேவிகுளம் இறைச்சல்பாறை பகுதியில் 3:00 மணிக்கு வந்தபோது, எதிரே தவறாக வந்த கார் மீது மோதி விடாமல் தவிர்க்க எண்ணி டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது எதிர்பாராத விதத்தில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள பயணிகள் நிழற் குடையில் மோதிய வேகத்தில் ஓடை தடுப்பில் மோதி நின்றது. பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் சுற்றுலா பயணிகள் காயம் எதுவும் இன்றி தப்பினர்.