இடுக்கியில் படகு சேவை துவக்கம் மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்
மூணாறு: இடுக்கியில் கன மழையால் முடங்கிய சுற்றுலா படகு சேவை நான்கு நாட்களுக்கு பிறகு நேற்று துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.கேரளா இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை அவ்வப்போது தீவிரமடைந்து பலத்த மழை பெய்து வருகிறது. அதற்கு ஏற்ப வானிலை ஆய்வு மையம் பல்வேறு அலர்ட்டுகளை விடுத்து வருகிறது. ரெட், ஆரஞ்ச் ஆகிய அலர்ட்டுகள் விடுக்கும்போது சுற்றுலாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். குறிப்பாக படகு சவாரி உட்பட நீர்நிலை சுற்றுலா, டிரெக்கிங் உட்பட சாகச பயணம் தொடர்பான சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்படும். அதன்படி ஜூன் 25 முதல் கன மழைக்கான பல்வேறு அலர்ட்டுகள் விடுக்கப்பட்டதால், அதே நாளில் நீர்நிலை, சாகச சுற்றுலாவுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.இந்நிலையில் இம்மாவட்டத்திற்கு நேற்று பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டபோதும், அதற்கு ஏற்ப மழை பெய்யவில்லை. அதனால் நீர்நிலை சுற்றுலா உட்பட பிற சுற்றுலாவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதால், நான்கு நாட்களுக்கு பிறகு சுற்றுலா படகு சேவை நேற்று துவங்கியது. அதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.