உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொலை தொடர்பு வசதியின்றி சுற்றுலா பயணிகள்... தவிப்பு :குரங்கணியில் அலைபேசி டவர் பணி முடக்கம்

தொலை தொடர்பு வசதியின்றி சுற்றுலா பயணிகள்... தவிப்பு :குரங்கணியில் அலைபேசி டவர் பணி முடக்கம்

போடி:மாவட்டத்தில் குரங்கணி மலைப்பகுதியில் பி.எஸ்.என்.எல்., டவர் அமைக்க சர்வே பணி ஏழு ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் உள்ளதால் தொலை தொடர்பு வசதி இன்றி மலைக் கிராம மக்கள், சுற்றுலா பயணிகளும் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். போடியில் இருந்து 18 கி.மீ., தொலைவில் உள்ளது குரங்கணி மலைப்பகுதி. இங்கிருந்து 22 கி.மீ., தூரத்தில் டாப் ஸ்டேஷன் உள்ளது. இப்பகுதியில் கொழுக்குமலை, முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல், கொட்டகுடி உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. காபி, மிளகு, பலா, எலுமிச்சை, இலவம், ஏலம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. மத்திய அரசின் காபி டெப்போ , சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி, போலீஸ் ஸ்டேஷன், ஆரம்பப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. நீர் அருவிகள், பசுமையான மலை முகடுகள் அமைந்து உள்ளதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். உலகம் நவீன தொலை தொடர்பு வசதிகளை பெற்றுள்ள நிலையில் குரங்கணியில் அலைபேசி டவர் இல்லாததால், இப்பகுதி மக்கள் அலைபேசி பயன்படுத்த முடியாமல் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளனர். ஏழு ஆண்டுகளுக்கு முன் குரங்கணி அருகே கொழுக்குமலை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 23 பேர் பலியாயினர். அங்கு அலைபேசி டவர் இல்லாததால் அங்கிருந்து மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாமலும், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதிலும் சிரமம் ஏற்பட்டது. இது போன்ற அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க குரங்கணியில் பி.எஸ்.என்.எல்., டவர் அமைக்க சர்வே நடந்தது. ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மலைக்கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அலைபேசி டவர் அமைக்க வேண்டும் என ' தினமலர் நாளிதழில் ' செய்தி வெளியானது. இச் செய்தி எதிரொலியால் குரங்கணி அருகே கொட்டகுடி, முந்தல், அகமலை, தேவாரம் அருகே பளிமுத்தன் கரடு பகுதிகளில் யுனிவர்சல் சர்வீஸ் அப்ளிகேஷன் என்ற திட்டத்தின் கீழ் பி.எஸ்.என்.எல்., டவர் அமைக்கும் பணிக்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. முதல் கட்டமாக முந்தலில் அலைபேசி டவர் அமைத்தனர். ஆனால் குரங்கணியில் டவர் அமைக்காமல் கிடப்பில் உள்ளது. மலைக் கிராம மக்கள், சுற்றுலா பயணிகள் பயன் பெறும் வகையில் குரங்கணியில் அலைபேசி டவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக் கிராம மக்கள், சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ