போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் தவிப்பு
மூணாறு : மூணாறிலும், சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளிலும் நிலவிய கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆகியோர் தவித்தனர்.மூணாறில் பண்டிகை, சுற்றுலா சீசன் ஆகிய காலங்களில் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படும். அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய நிவர்த்தி இன்றி நெரிசல் தொடர்ந்து வருகின்றது.தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை என்பதால் பயணிகள் வருகை அதிகரித்தது. மூணாறு நகர், சுற்றியுள்ள மாட்டுபட்டி, குண்டளை, டாப்ஸ்டேஷன், ஐந்தாம் மைல், லக்கம் உள்பட முக்கிய சுற்றுலா பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு பல கி.மீ., தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. அவற்றில் சிக்கி சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆகியோர் தவித்தனர்.பற்றாக்குறை: தற்போது சபரிமலை மண்டல மகர விளக்கு சீசன் என்பதால் மூணாறு போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ஆயுத படை ஆகியவற்றை சேர்ந்த போலீசார் சபரிமலை சிறப்பு பணிக்கு சென்றனர்.அதனால் போலீஸ்காரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய இயலாமல் திண்டாட நேரிட்டது குறிப்பிடதக்கது.