ரோட்டோர வாகன வியாபாரத்தால் தொடரும் போக்குவரத்து இடையூறு
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியில் சிறு வியாபாரிகள் வாகனங்களில் பொருட்களை கொண்டு வந்து ரோட்டில் நிறுத்தி வியாபாரம் செய்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டி நகர் பகுதி கொண்டமநாயக்கன்பட்டி செக்போஸ்டில் துவங்கி தாலுகா அலுவலகம் வரை 1.5 கி.மீ., தூரம் உள்ளது. சரக்கு லாரிகளில் தக்காளி, வெங்காயம், கிழங்கு வகைகள், மாம்பழம், உட்பட பல வகை பொருட்களை கொண்டு வந்து போக்குவரத்து நெருக்கடியான இடங்களில் வாகனங்களை நிறுத்தி வியாபாரம் செய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆண்டிபட்டியில் ஏற்கனவே ரோட்டின் ஓரங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து பலரும் வியாபாரம் செய்கின்றனர். ரோட்டில் ஓரங்களில் நிரந்தரக் கடை வைத்திருப்பவர்கள் ரோடு வரை விரிவாக்கம் செய்வதுடன் ஆங்காங்கே தங்களது வாகனங்களையும் நிறுத்தி விடுகின்றனர். வியாபாரிகள் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை போலீசார் கண்டு கொள்வதில்லை. தினமும் தொடரும் இந்த நிகழ்வுகளால் அன்றாடம் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆண்டிபட்டி பகுதியை கடக்கும்போது ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்காக பல இடங்களில் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்த இடங்களை வியாபாரத்திற்காக பயன்படுத்துவதை தடுக்க ஆண்டிபட்டி போலீசார், பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.