ஐ.டி., ஊழியரிடம் ஆன்லைன் வர்த்தக ஆசை காட்டி ரூ.49 லட்சம் மோசடி இருவர் கைது
தேனி:தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஐ.டி., ஊழியர் சபரியிடம் ஆன்லைன் வர்த்தக ஆசை காட்டி ரூ.49 லட்சம் மோசடி செய்த புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் சொரியம்பட்டி ஆறுமுகம் 42, ராமநாதபுரம் மாவட்டம் துணையத்துார் மாதவன் 36, ஆகியோரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.கம்பத்தை சேர்ந்த சபரி 45, சமூக வலைதளம் மூலம் ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக அறிந்து சிலரை தொடர்பு கொண்டார். அவர்கள் ஆலோசனை வழங்கி, சில 'லிங்க்'களை அனுப்பினர். அந்த லிங்கில் உள்ள 6 வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்ப கூறினர். இதனை நம்பிய சபரி ரூ.49 லட்சத்தை அனுப்பினார். பணம் திரும்ப கிடைக்கவில்லை. தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் ஒரு வங்கி கணக்கு மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்பவருடையது என தெரியவந்தது. விக்னேஷிடமிருந்து வங்கி கணக்கு, அலைபேசி சிம்கார்டுகளை மதுரையை சேர்ந்த ராஜா, மனைவி வீரலட்சுமி வாங்கியது தெரிந்தது. மூவரையும் 2 மாதங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர்.சபரி அனுப்பிய பணம் ரூ.10.97 லட்சம் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயிலில் உள்ள தனியார் வங்கி கணக்கிற்கு சென்றதும் தெரிந்தது. அந்த வங்கி கணக்கு புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை சேர்ந்த ஆறுமுகம் பெயரில் இருந்தது. அவர் இரும்பு கடை நடத்தியதும், பணத்திற்காக தனது வங்கி கணக்கு, அதனுடன் தொடர்புடைய சிம்கார்டை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாதவனுக்கு விற்பனை செய்தது தெரிந்தது. மாதவன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனம் நடத்தினார். வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் ஆறுமுகம், மாதவன் ஆகியோரை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், படிப்பறிவு குறைந்தவர்களின் வங்கி கணக்குகள், அலைபேசி எண், ஏ.டி.எம்., கார்டுகளை சிலர் பணம் கொடுத்து வாங்குகின்றனர். அதனை வடமாநிலங்களை சேர்ந்த சைபர் கொள்ளை கும்பலுக்கு விற்கின்றனர். முடக்கப்பட்ட ஆறுமுகத்தின் வங்கி கணக்கில் சிலநாட்களில் ரூ.3.5 கோடி வரை பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களிடமிருந்து ரூ.1.80 லட்சம், 3 வங்கி பாஸ் புத்தகம், ஏ.டி.எம்., கார்டுகள், 2 அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என்றனர்.