மண்சரிவில் இருவர் பலி கண்காணிப்பாளர் கைது
மூணாறு: மூணாறு அருகே சித்திராபுரத்தில் தனியார் தங்கும் விடுதியில் செப்.17ல் கட்டுமான பணியின்போது மண்சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் பைசன்வாலியைச் சேர்ந்த பென்னி 49, ஆனச்சால் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் 40, ஆகியோர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக பள்ளிவாசல் வி.ஏ.ஓ., ஆன்ஷில் வெள்ளத்தூவல் போலீசில் புகார் அளித்தார். விடுதி உரிமையாளர் ஷெரின்அனிலா ஜோசப், அவரது கணவர் ஷெபி, கட்டுமான பணி கண்காணிப்பாளர் ஆலுவாவைச் சேர்ந்த ஜெய்சன் 45, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஜெய்சனை போலீசார் கைது செய்தனர். இவர் கட்டட உரிமையாளர்களின் உறவினராகும். 'பணிகளை நிறுத்துமாறு வருவாய் துறையினர் நோட்டீஸ் அளித்தும், அதனை மீறி பணிகள் செய்ய உடந்தையாக இருந்தவர்கள் குறித்து விரிவாக விசாரணை துவங்கியது', என இடுக்கி டி.எஸ்.பி. ராஜன் கே. அரமனா தெரிவித்தார்.