துார்வாரப்படாத தாமரைக்குளம் கண்மாய்; நீர்நிலை மாசுபடும் அபாயம்
பெரியகுளம்: இரு போகம் நெல் விளையும் பயிர்களுக்கு தாயாக விளங்கும் தாமரைக்குளம் கண்மாய் துார் வாரவில்லை. மதகுகள் பழுதாகி, கருவேலம் மரங்கள் அகற்றப்படாமல் இருப்பதால் நீர் நிலை பல்வேறு வகையில் மாசுபடுகிறது. இதனால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.பெரியகுளம் அருகே மஞ்சளாறு வடிநிலக் கோட்டத்திற்கு உட்பட்ட தாமரைக்குளம் கண்மாய் உள்ளது. 50 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த கண்மாய்க்கு, சோத்துப்பாறை அணையில் இருந்தும், நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையால் தண்ணீர் கிடைக்கிறது. கண்மாய் பராமரிப்பில் அக்கறை காட்டும் தாமரைக்குளம் ஆயக்கட்டு காரர்களிடம் ஆலோசிக்காமல் ரூ.30 லட்சத்திற்கு மீன் பிடி ஏலம் விட்டது. அதன் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு நீர்வளத் துறையினர், கண்மாயை பராமரிப்பு செய்யவில்லை. தாமரைக்குளம், வடுகபட்டி பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளில், 30 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் ஆதாரமாக கண்மாயில் 'போர்வெல்' அமைத்து குழாய் வழியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 400 ஏக்கர் பாசனத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கும் தாமரைக்குளம் கண்மாய் கரையில் குப்பை பரவி கிடக்கிறது. காற்றுக்கு கரையில் கிடக்கும் குப்பை நீர்நிலையில் விழுந்து மாசுபடுகிறது. மதகுகள் சீரமைக்க கோரிக்கை
முத்துச்சாமி, தலைவர், தாமரைக்குளம் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கம்: தாமரைக்குளம் கண்மாயில் 150 மீட்டர் இடை வெளியில் அடுத்தடுத்து 3 மதகுகளும் சேதமடைந்துள்ளது. மனிதனுக்கு உடல் உறுப்புகளில் 'கண்கள்' எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு கண்மாய்க்கு மதகுகள் முக்கியம். மதகுகள் பழுதால் விவசாயத்திற்கு நீர் திறப்பின் போது சேதமடைந்த மதகுகளை தூக்கி இறக்க முடியவில்லை. இதனால் தேவையான நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகிறோம். மழை காலங்களில் உபரிநீர் விளை நிலங்களுக்கு செல்லாமல் தடுப்பதற்கு 6 அடி உயரம் ஒன்றரை அடி அகலம் உடைய ரூ.2 லட்சம் மதிப்பிலான 10 மதகு கதவுகள் திருடு போயுள்ளது. தென்கரை போலீசாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கண்மாய் பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் உள்ளது., என்றார். புறக்கணிக்கப்பட்ட கண்மாய்
பவுன்ராஜ், விவசாயி: கடந்த 5 ஆண்டுகளில் நீர்வளத்துறையினர் கண்மாய் பராமரிப்பு செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். தாமரைப் பூக்கள் நிறைந்து அழகாக காட்சி அளித்த கண்மாயில் தற்போது தண்ணீரை உறிஞ்சும் ஆகாயத்தாமரை, ஊணான் செடிகள், கருவேலம் மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இவைகள் கண்மாயில் சிறிதளவு தண்ணீரையும் போட்டி போட்டு உறிஞ்சுகிறது. இடுபொருட்கள் கொண்டு செல்வதற்கு கண்மாய் கரை ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இந்த கண்மாயினை சப்-கலெக்டர் ரஜத்பீடன் பார்வையிட்டு நீர் பாசனத்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட வேண்டும்., என்றார். --