சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்துங்கள்! தேவதானப்பட்டி பகுதி மக்கள் பயன்பெறும் வகையில்
தேவதானப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 1968ல் 2.50 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்டது. இச்சுகாதார நிலையத்திற்கு தேவதானப்பட்டி, டி.வாடிப்பட்டி, எருமலை நாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, கதிரப்பன்பட்டி, நல்லகருப்பன் பட்டி, நாகம்பட்டி, தர்மலிங்கபுரம், மஞ்சளாறு, ராசிமலை, அட்டணம்பட்டி உட்பட 50 உட்கடை கிராமங்களிலிருந்து தினமும் 200 பேர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இதன் கட்டுப்பாட்டில் எ.புதுப்பட்டி, மேல்மங்கலம், வைகை அணை, கெங்குவார்பட்டி ஆகிய 6 ஆரம்ப சுகாதார நிலையமும், 27 துணை சுகாதார நிலையமும் உள்ளது.டாக்டர் பற்றாக்குறைவட்டார மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் உள்நோயாளிகள் பகுதி, ஆப்பரேஷன் தியேட்டர், புறநோயளிகள் பகுதிகள் உள்ளன. நர்ஸ், பார்மசிஸ்ட், லேப் அசிஸ்டண்ட் மற்றும் உதவியாளர்கள் உள்பட 30 பேர் உள்ளனர்.இங்குள்ள 5 டாக்டர்கள் பணியிடங்களில் 3 டாக்டர்கள் பணி மாறுதலில் சென்றனர். இதனால் 5மாதங்களாக 3 டாக்டர் பணியிடம் காலியாக உள்ளது. தற்போதுள்ள இரு பெண் டாக்டர்களில் ஒருவர் வட்டார மருத்துவ அலுவலராக உள்ளதால் அவரது எல்லைக்கு உட்பட்ட ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களை ஆய்வு, களப்பணிக்கு பணிக்கு செல்ல வேண்டியுள்ளது. மீதியுள்ள ஒரு டாக்டர் 200 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் கடந்த காலங்களில் மாதம் 30 பிரசவங்கள் நடந்த நிலையில் டாக்டர் பற்றாக்குறையால் பிரசவம் 15 ஆக குறைந்தது.போதிய டாக்டர் இல்லாததால் கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு 20 கி.மீ., தூரமுள்ள தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 10 கி.மீ.துாரமுள்ள பெரியகுளம் மாவட்ட மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.வட்டார மருத்துவ அலுவலர் கோமதி கூறுகையில்: 'டாக்டர்கள் பணியிடம் நிரப்பக்கோரி மருத்துவ இயக்குனகரகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் காலப்பணியிடம் நிரப்பப்படும்' என்றார். தரம் உயர்த்த வேண்டும்
வெங்கடேசன், சமூக ஆர்வலர்,நல்லகருப்பன்பட்டி : --தேவதானப்பட்டி வட்டார சுகாதார நிலையத்திற்கு தினமும் 200 பேர் சிகிச்சைக்கு செல்கின்றனர்.டாக்டர்கள் பற்றாக்குறையால், மக்கள் சிரமம் அடைகின்றனர். இங்கு க கூடுதலாக டாக்டர்கள் பணியிடம் நிரப்பி தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.