உப்பார்பட்டி தடுப்பணை உடைந்து 100 ஏக்கர் நெல் பயிர் பாதிப்பு
போடி: உப்பார்பட்டி தடுப்பணை பக்கவாட்டு சுவர் உடைந்ததால் வெள்ளம் திசை மாறி பாய்ந்து 100 ஏக்கர் நெல் வயலில் பாதிப்பை ஏற்படுத்தியதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். போடி பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை, முல்லைப் பெரியாற்றில் அதிக நீர் வரத்தால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. பாலார்பட்டியில் இருந்து கூழையனுார் செல்லும் பாதையில் உப்பார்பட்டி தடுப்பணை உள்ளது. இத் தடுப்பணை கட்டி 100 ஆண்டுகளுக்கு மேலானதால் பலமிழந்துள்ளது. இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் முல்லை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் உப்பார்பட்டி தடுப்பணையின் மேற்கு பக்கவாட்டு சுவர் உடைந்தது. இதனால் வெள்ளம் திசை மாறி மேற்கு பக்கம் செல்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள 2 ஏக்கர் நெல் வயலை முழுவதும் அடித்து சென்றது. வெள்ளம் தொடர்ந்து நெல் வயல்களுக்குள் பாய்ந்து 100 ஏக்கர் நெல் மகசூல் பாதித்தது. விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். மழை தொடர்வதால் வயல்களுக்கு செல்வதற்கு ரோடு, பாதை வசதி இல்லை. தடுப்பணையை மணல் மூடைகளால் சீரமைத்து திசை மாறி செல்லும் நீரை ஆற்றில் திரு ப்பிட வேண்டும். இதன் மூலம் நெல் மகசூல் பாதிப்பை தடுக்கலாம். தடுப்பணை உடைப்பிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.