பெற்றோரை பராமரிக்காத மகன்களிடம் இருந்து தானம் வழங்கிய நிலம் மீட்பு உத்தமபாளையம் ஆர். டி.ஓ. உத்தரவு
உத்தமபாளையம்: தந்தை, தாயை பராமரிப்பதாக கூறி அவரிடமிருந்த பெற்ற ஒரு ஏக்கர் நிலத்தின் அனுபவ பாத்திய பத்திரத்தை உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. செய்யது முகமது ரத்து செய்து உத்தரவிட்டார். உத்தமபாளையம் அருகே சின்னஒவுலாபுரத்தில் வசிப்பவர் முத்துக் கருப்பன் 90, இவருக்கு 66 வயதுடைய மனைவி உள்ளார். 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர் 2010ல் தனது மகன்கள் கருப்பையா, ஜெயபாலனுக்கு தன்னிடம் இருந்த 6 ஏக்கர் புஞ்சை நிலத்தை பிரித்து கொடுத்துள்ளார். தனக்கும் தன் மனைவியின் பராமரிப்பிற்கும் என ஒரு ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டார். கடந்த ஏப்ரலில் தனது இரண்டு மகன்களும்,' ஒரு ஏக்கரை தங்களுக்கு கொடுத்து விடுங்கள், நாங்கள் உங்களை பராமரித்து கொள்கிறோம்,' என கூறியதன் பேரில், தன்னிடம் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தின் அனுபவ பாத்திய விடுதலை பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். பத்திரம் எழுதும் போது இரு மகன்களும் தனித் தனியே ரூ.1.50 லட்சம் தருவதாகவும், பராமரிப்பு செய்வதாகஉறுதியளித்துள்ளனர். ஆனால் பணமும் தரவில்லை. பராமரிப்பும் செய்யவில்லை. தந்தையிடம் பெற்ற நிலத்தை இருமகன்களும், தங்களது பிள்ளைகளுக்கு தானம் எழுதி கொடுத்துள்ளனர். இதனால் சிரமப்பட்ட முத்துக் கருப்பன், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம்,பராமரிப்பு சட்டத்தின் கீழ் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. செய்யது முகமதுவிடம் மனு அளித்தனர். விசாரணை செய்த ஆர்.டி.ஒ., தனது உத்தரவில், கடந்த ஏப்ரலில் சின்னமனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் முத்துக் கருப்பன் எழுதி கொடுத்த அனுபவ பாத்திய விடுதலை பத்திரம் ரத்து செய்யப்படுகிறது. ஜெயபாலன், கருப்பையா ஆகிய இருவரும் தனது மகன்களுக்கு கொடுத்த தான பத்திரங்களும் ரத்து செய்யப்படுகிறது, என்று உத்தரவிட்டார்.