வேளாண் உதவி இயக்குநர் பணியிடங்கள் காலி
கம்பம் : கம்பம், பெரியகுளம், தேனி வேளாண் உதவி இயக்குனர் காலிப் பணியிடங்களை நிரப்ப இணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரியுள்ளனர்.தேனி வேளாண் மற்றும் தோட்டக்கலை மாவட்டமாகும். நெல், கரும்பு, வாழை , திராட்சை, மா, காய்கறி பயிர்கள் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நெல் சாகுபடியாகிறது. பெரியகுளம் வட்டாரத்தில் சோத்துப்பாறை, மஞ்சளாறு பாசனத்தில் நெல் அதிகளவில் சாகுபடி நடைபெறுகிறது.கம்பம் வேளாண் உதவி இயக்குனராக இருந்த பூங்கோதை பணி ஓய்வு பெற்று ஒராண்டாகிறது. உதவி இயக்குனர் பணியிடம் காலியாக உள்ளது. பெரியகுளம், தேனி உதவி இயக்குனர் பணியிடங்களும் நீண்ட காலமாக காலியாக உள்ளது. விவசாயிகளுக்கு தொழில் நுட்ப ஆலோசனைகள், மானிய விலையில் விதைகள், இடுபொருள்கள் வழங்க வேண்டிய காலமாகும். இந்த நேரத்தில் உதவி இயக்குனர்கள் இருந்தால் தான் விவசாய பணிகள் தொய்வின்றி நடைபெறும்.எனவே கம்பம், பெரியகுளம், தேனி வட்டாரங்களுக்கு வேளாண் உதவி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப வேளாண் இணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.