மழையால் பசுமையானது வைகை அணை பூங்கா
ஆண்டிபட்டி: கடந்த சில வாரங்களில் வைகை அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து பெய்த மழையால் வைகை அணை பூங்காவில் மரம், செடி, கொடிகள் புத்துணர்வு பெற்று பசுமையாக காட்சியளிக்கிறது.வைகை அணைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கேரளா, கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் வைகை அணை பார்த்துச் செல்ல தவறுவதில்லை. வைகை அணையின் வலது, இடது கரையில் உள்ள 10 க்கும் மேற்பட்ட பூங்காக்களில் இடதுகரை சிறுவர் பூங்கா, வலது கரையில் உள்ள ரயில் பூங்கா, செயற்கை நீரூற்று, மாதிரி அணை ஆகியவை சிறப்பு அம்சங்களாக உள்ளன.பூங்காக்கள் அனைத்தும் தொடர் பராமரிப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் தருகிறது. கடந்த சில மாதங்களில் வாட்டி வதைத்த வெயில், பலத்த காற்றால் பூங்காவில் வறட்சியான சூழல் நிலவியது. இந்நிலையில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து பெய்த மழையால் பூங்காவில் உள்ள மரம் செடி கொடிகள் புத்துணர்வு பெற்று பசுமையாக காட்சியளிப்பது சுற்றுலா வரும் பயணிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.