68 அடியை கடந்தது வைகை அணை நீர்மட்டம்; இன்று 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
ஆண்டிபட்டி; ''தேனி ஆண்டிபட்டி வைகை அணை நீர்மட்டம் 68 அடியை கடந்துள்ளது. இன்று அணை நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்ததும், 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.'' என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கேரளாவில் தொடரும் தென்மேற்கு பருவ மழையால் முல்லை பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சில வாரங்களாக நீர்வரத்து தொடர்வதால் அணை நீர்மட்டம் நேற்று காலை 68.14 அடியாக உயர்ந்தது. அணை உயரம் 71 அடி. ஜூலை 26ல் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்த போது முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இன்று (ஆக.,4ல்) அணை நீர்மட்டம் 68.50 அடியானதும் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். நீர்வரத்து 69 அடியாகும்போது 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணையின் நீர் வரத்தை பொறுத்து, தண்ணீர் வெளியேற்றம் நிர்ணயம் செய்யப்படும். தற்போது வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியில் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு வினாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. நேற்று அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1578 கன அடியாக இருந்தது. நீர்வரத்து கணிசமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இன்று மதியம் 12:00 மணிக்குள் அணை நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்து விடும். இதனைத் தொடர்ந்து 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். வைகை அணையில் எந்நேரமும் கூடுதலான அளவில் நீர் திறக்கப்படும் சூழல் இருப்பதால், வைகை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.