வள்ளலார் சத்ய தருமச்சாலை ஐந்தாம் ஆண்டு துவக்க விழா
கூடலுார்: கூடலுார் திருஅருட்பிரகாச வள்ளலார் சத்ய தருமச்சாலை ஊராட்சி ஒன்றிய பூங்கா பள்ளி அருகில் நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.தினந்தோறும் ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா கொடியேற்றுதலுடன் துவங்கியது. அகவல்பாராயணம் நடந்தது. சமரச சுத்த சன்மார்க்க ஊர்வலம் மெயின் பஜார், காமாட்சியம்மன் கோயில் தெரு, பெட்ரோல் பங்க் தெரு, எல்.எப். ரோடு வழியாக சென்றது. அன்னதானத்தால் கிடைக்கும் நன்மையும், அனைவரும் இன்புற்று வாழ்வது குறித்தும் சென்னை தயவுசெல்வபூபதி சொற்பொழிவாற்றினார். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தருமச்சாலை அமைப்பின் தலைவர் இளங்கோவன், செயலாளர் கோபால், பொருளாளர் பாண்டி, பொறுப்பாளர்கள் சரவணன், மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.