அரோகரா கோஷத்துடன் சூரசம்ஹாரத்திற்கு வேல் வாங்கல்
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் இன்று (அக்.27) ல் நடக்கும் சூரசம்ஹாரத்திற்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நேற்று அரோகரா கோஷத்துடன் நடந்தது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் அக்.22 முதல் கந்த சஷ்டி விழா துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில் கங்கணம் கட்டி விரதம் மேற்கொண்டு உள்ளனர். ஏழு நாட்கள் விழாவில் தினமும் காலை, மாலை பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. கோயில் வளாகத்தில் பக்தர்கள் கந்த சஷ்டி பாடி பாலசுப்பிரமணியர் தரிசனம் செய்து வருகின்றனர். ஏழு நாள் சஷ்டி திருவிழாவில் தினந்தோறும் பாலசுப்பிரமணியர் ராஜ அலங்காரம் உட்பட பல்வேறு அலங்காரங்கள் சுவாமிக்கு செய்திருந்தனர். நேற்று 5ம் நாள் விழாவில் அரோகரா கோஷத்துடன் அறம் வளர்த்த நாயகியிடம் அர்ச்சகர் கார்த்திகேயன் வெள்ளிவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த வெள்ளிவேலினால் இன்று (அக்.27ல்) மாலை 4:00 மணிக்கு சூரசம்ஹாரம் துவங்குகிறது. பாலசுப்பிரமணியர், சூரபத்மன் உட்பட நான்கு அரக்கர்களை 4 இடங்களில் வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று விமர்சையாக நடக்க உள்ளது. இன்று சூரசம்ஹாரம், நாளை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்க உள்ளதால் கோயிலுக்கு பக்தர்களின் வசதிக்காக பிரகார கதவை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் நுழைவு வாசல் கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள், பிரகார வாசல் வழியாக சிரமம் இன்றி வெளியேற முடியும். கடந்தாண்டு வெளியே செல்லும் கதவு திறக்கப்படாததால் கூட்ட நெரிசலில் அசாதாரண சூழ்நிலை உருவானது. இதனை தவிர்க்க பாதுகாப்புப் பணிகளில் கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும். பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜை நடந்தது.