மாடித்தோட்டம் அமைக்க 100 சதவீத மானியத்தில் காய்கறி விதைகள்
போடி : ''போடி வட்டாரத்தில் மாடித்தோட்டம் அமைப்பதற்காக காய்கறி விதைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.'' என, போடி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராஜமுருகன் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: சிறிய வீட்டில் வசிப்பவர்கள் கூட தங்களிடம் உள்ள குறைவான இடத்தில் மாடித் தோட்டம் அமைத்து தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்யலாம். மாடித்தோட்டம் அமைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் மாடித்தோட்டத்தில் காய்கறிகளை உற்பத்தி செய்யவும், உற்பத்தி செய்த காய்கறிகளை வெளியே விற்பனை செய்யவும் 100 சதவீத மானியத்தில் காய்கறி விதைகள் வழங்கப்படுகிறது. தக்காளி, கத்தரி, கொத்தவரை, மிளகாய், வெண்டை, சிறுகீரை உள்ளிட்ட விதைகள் கொண்ட பாக்கெட்டுகளை பெற விரும்பும் பொதுமக்கள் தங்களது ஆதார் நகலை போடி தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் கொடுத்து காய்கறி விதைகளை பெறலாம்., என்றார்.