| ADDED : டிச 26, 2025 02:19 AM
கூடலுார்: குமுளி மலைப்பாதையில் ஒருவழிப் பாதையாக அமல்படுத்துவதில் தேனி, இடுக்கி மாவட்ட நிர்வாகம் மவுனம் காத்து வருவதால் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் நெரிசலில் சிக்கி பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை நடக்கிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் சென்ற வண்ணம் உள்ளனர். தரிசனம் முடிந்து திரும்பும் வாகனங்களும் அதிகம். குமுளி மலைப் பாதையில் நெரிசலை தவிர்க்க மண்டல பூஜை, மகரஜோதி விழா துவங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன் ஒருவழிப் பாதையாக போக்குவரத்து மாற்றப்படும். சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு வழியாகவும், திரும்பும் வாகனங்கள் குமுளி வழியாகவும் செல்லும் விதத்தில் ஆண்டு தோறும் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படும். குமுளி வழியில் திரும்பும்போது வளைவுகள், சரிவுகள் அதிகம் என்பதால் விபத்துகள் அதிகம் ஏற்பட்டன. எ இந்த ஆண்டு பாதையை மாற்றி சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் குமுளி மலைப்பாதை வழியாகவும், திரும்பும் வாகனங்கள் கம்பம் மெட்டு மலைப் பாதை வழியாகவும் செல்ல தேனி கலெக்டர் பரிந்துரைத்தார். தரிசனம் முடிந்து திரும்பும் வாகனங்கள் குமுளி வழியாகவும் சபரிமலைக்கு வரும் வாகனங்கள் கம்பம் மெட்டு வழியாகவும் கடந்த ஆண்டுகள் போல அமல்படுத்த வேண்டும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் வற்புறுத்தியது. தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் சிப்ஸ், ஏலம், மிளகு, சாக்லேட் உள்ளிட்டவைகள் வாங்கிச் செல்லும் வகையில் கேரள மாநிலம் குமுளியில் சீசனுக்காக ஏராளமான புதிய கடைகள் துவக்கப்பட்டு உள்ளன. தரிசனம் முடிந்து கம்பம் மெட்டு வழியாக சென்றால் குமுளியில் வியாபாரிகள் பாதிக்கப்படுவர். தேனி கலெக்டரின் பரிந்துரையை இடுக்கி மாவட்ட நிர்வாகம் ஏற்கவில்லை. இப்பிரச்னையால் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படவில்லை. இந்தாண்டு ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. குமுளி மலை பாதையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. மண்டல பூஜைக்காக செல்லும் வாகனங்கள் பல மணி நேரம் மலைப் பாதையில் காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது. இது தவிர ஆம்னி பஸ்கள், லாரிகளும் செல்வதால் நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. நாளை மண்டல பூஜை நிறைவடையும் நிலையில் மகரஜோதி விழாவிற்காவது ஒருவழிப்பாதை அமல்படுத்தி நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் முன்வர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.