சரியான எடையில் ரேஷன் பொருட்கள் விற்பனையாளர்கள் வலியுறுத்தல் எடை குறைவால் புலம்பும் விற்பனையாளர்கள்
தேனி: நுகர்பொருள் வாணிப கழக கோடவுன்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் உணவுப்பொருட்களை சரியான எடையில் அனுப்ப வேண்டும். எடைகுறைவாக அனுப்புவதால் தாங்கள் தான் பாதிக்கப்படுவதாக ரேஷன்கடை விற்பனையாளர்கள் புலம்புகின்றனர். தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., கருவிகளில் பதிவு செய்து உணவுப்பொருட்கள் கார்டுதார்களுக்கு வழங்கப்படுகிறது. சில மாதங்களாக பி.ஓ.எஸ்., கருவியுடன் எடை இயந்திரமும் இணைக்கப்பட்டு உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் வழங்கப்படும் பொருட் களின் அளவு ரசீதில் குறிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு சரியான அளவில் உணவுப்பொருட்கள் வழங்கினாலும் ரேஷன்கடைகளுக்கு பொருட்கள் சரியான அளவில் வருவதில்லை என விற்பனையாளர்கள் புலம்புகின்றனர். அவர்கள் கூறியதாவது: நுகர்பொரு ள் வாணிப கழங்களில் இருந்து கூட்டுறவு சங்கங்களின் கீழ் உள்ள ரேஷன்கடைகளுக்கு அரிசி, சீனி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. கோடவுன்களில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்கள் மறு எடையிட்டு வேறுசாக்கில் மாற்றி அந்த மாதத்திற்கான கலர் நுால் கொண்டு மூடையை தைக்க வேண்டும். அந்த மூடைகளைதான் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் மறு எடையிடாமல் கோடவுன்களுக்கு வரும் மூடைகளை அப்படியே கடைகளுக்கு அனுப்புகின்றனர். அரிசி, பருப்பு உள்ளிட்டவை சாக்கு எடையுடன் 50.650 கிலோ கிராம் இருக்க வேண்டும். ஆனால் சாக்குடன் 46 முதல் 48 கிலோ மட்டும் உள்ளன. இதில் சீனி, பருப்பு 4 கிலோ வரை குறைவாக அனுப்பப்படுகிறது. ரேஷன் கடைகளுக்கு எடைகுறைவாக அனுப்பபடுவதை தவிர்க்க நுகர்பொருள் வாணிப கழக, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.