ரேடியேட்டர் பழுதால் போடி மெட்டு மலையில் பாதியில் நின்ற அரசு பஸ் அதிக புகை வெளியேறும் வீடியோ வைரல்
போடி: தேனியில் இருந்து மூணாறு சென்ற அரசு பஸ்சின் ரேடியேட்டர் பழுதாகி போடிமெட்டு மலைப் பாதையில்பாதியில் நின்றது. பஸ்சில் அதிக புகை வெளியேறியதை வீடியோ பதிவு செய்து வளை தளங்களில் வைரல் ஆகிறது. தமிழக கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில் போடிமெட்டு அமைந்து உள்ளது. இந்த இடம் 17 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து கடல் மட்டத்தில் இருந்து 4644 அடி உயரத்தில் உள்ளது. தேனி, போடியில் இருந்து போடிமெட்டு வழியாக கேரளா பகுதியான மூணாறு, ராஜாக்காடு, நெடுங்கண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 20க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப் படுகின்றன. நேற்று முன்தினம் மதியம் 2:30 மணி அளவில் தேனியில் இருந்து போடிமெட்டு வழியாக மூணாறுக்கு (டி.எண் 57 எண் 2444) அரசு பஸ் சென்றது. 6 வது வளையில் திரும்பும் போது பஸ்சில் இருந்த ரேடியேட்டர் சூடேறி புகையாக வெளியேறியது. இதனால் டிரைவர் ரோட்டோரத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டார். சிறிது நேரம் கழித்து ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்றிய பின் பயணிகள் இன்றி சென்ற பஸ் பாதியில் நின்றது. இதனால் பயணிகளும் பிற வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகளுக்கு ரோடு தெரியாத அளவிற்கு புகை மண்டலத்தால் சிரமம் அடைந்தனர். பின் பக்கமாக சென்ற சுற்றுலா பயணி அலை பேசியில் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.முறையான பராமரிப்பு இல்லாமலும், பஸ் இஞ்சின்களுக்கு கழிவு ஆயில் ஊற்றப் படுவதால் தேனி, போடியில் இருந்து மலைப் பாதையில் இயக்கப்படும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுகின்றன. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. மலைப்பாதையில் தகுதியான பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.