உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு ஜூன் முதல் வாரம் நீர் திறக்க வாய்ப்பு

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு ஜூன் முதல் வாரம் நீர் திறக்க வாய்ப்பு

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு ஜூன் முதல் வாரத்தில் நீர் திறக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கும். சில ஆண்டுகளாக கை கொடுத்த மழையால் வைகை அணையில் கணிசமான அளவு நீர் இருப்பு உள்ளது. அணையின் நீர் இருப்பை பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் இரு போக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு ஜூன் மாதம் நீர் திறக்கப்படும்.இந்நிலையில் வைகை அணை நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சில வாரங்களாக வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை. தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் பெரியாறு அணை நீர்மட்டமும் வேகமாக உயர்வதால் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் வாய்ப்புள்ளது.அணைக்கான நீர் வரத்தும் சில நாட்களாக அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 53.90 அடியாக இருந்தது(மொத்த அணை உயரம் 71 அடி). அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 786 கன அடி. அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி -- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேற்றப்படுகிறது.தற்போதுள்ள நீர் இருப்பால் ஜூன் முதல் வாரத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு நீர் திறக்கப்படும் வாய்ப்புள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை