வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு 2ம் கட்டமாக நேற்று நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நேற்று காலை 9:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. வைகை அணையில் இருப்பில் உள்ள நீர் சில மாதங்களாக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனம், குடிநீருக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. டிச.,15ல் ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு 2ம் கட்டமாக வினாடிக்கு 1500 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீர், படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று காலை 9:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 745 கன அடி வீதம் 2ம் கட்டமாக ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து ஏற்கனவே கால்வாய் வழியாக வினாடிக்கு 700 கன அடி வீதமும், மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடியும் வெளியேறுகிறது. அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 1514 கன அடி நீர் வெளியேறுகிறது. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 105 கன அடியாகவும் நீர்மட்டம் 57.68 அடியாகவும் இருந்தது. அணை உயரம் 71 அடி.