உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஐகோர்ட் உத்தரவின்படி ஆக்கிரமிப்பில் கட்டிய 33 வீடுகளை அகற்ற நோட்டீஸ் நீர்வளத்துறையினர் 21 நாள் கெடு

ஐகோர்ட் உத்தரவின்படி ஆக்கிரமிப்பில் கட்டிய 33 வீடுகளை அகற்ற நோட்டீஸ் நீர்வளத்துறையினர் 21 நாள் கெடு

உத்தமபாளையம்:ராயப்பன்பட்டி, கோகிலாபுரத்தை சேர்ந்த 33 வீட்டு உரிமையாளர்களுக்கு ஆக்கிரமிப்பு அகற்ற 21 நாட்கள் கெடுவிதித்து நீர்வளத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராயப்பன்பட்டி ஐந்து மடை என்ற இடத்திலிருந்து முத்துலாபுரம் அருகே உள்ள கருங் கட்டான் குளத்திற்கு தண்ணீர் செல்லும் 2.65 கி.மீ. தூர வாய்க்கால் இருந்தது. இந்த வாய்க்கால் துவங்கும் இடத்திலிருந்து ஆனைமலையன் பட்டி பஸ் நிறுத்தம் வரை 50 ஆண்டுகளுக்கு முன்பே வீடுகளாக மாறியது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் பயன்பாடு இல்லாத வாய்க்காலை வீடுகளாக மாற்றி கொண்டனர். இதற்கு வருவாய்த் துறை பட்டா வழங்கி உள்ளது. குடிநீர் கு ழாய், மின் இணைப்புகள் பெற்றுள்ளனர். வாய்க்காலை ஆக்கிரமித்து ஊராட்சி நிர்வாகமும் திடக்கழிவு மேலாண்மை உரக் கூடம், கழிப்பறை, சமுதாய கூடங்களை கட்டி உள்ளது. 50 ஆண்டுகளாக இந்த ஆக்கிரமிப்பு கண்டு கொள்ளப்படவில்லை. இந்நிலையில் ராயப்பன்பட்டி ஒத்தக்கடையை சேர்ந்த மாரியப்பன் மதுரை ஐகோர்ட் கிளையில் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை நீர்வளத்துறை நிறைவேற்றவில்லை. எனவே, மாரியப்பன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த ஐகோர்ட், டிச. 10 க்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அதை தொடர்ந்து உத்தமபாளையம் நீர்வளத்துறை உதவி பொறியாளர் கதிரேஷ் குமார், ஆக்கிரமிப்பாளர்களுக்கு 21 நாள் கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: 100 ஆண்டுகளுக்கு முன் வாய்க்கால் இருந்துள்ளது. ஆனால் அதற்கு பதில் புதிதாக வாய்க்கால் அமைத்து தற்போது தண்ணீர் செல்கிறது. பழைய வாய்க்கால் பயன்இன்றி வண்டி பாதையாக மாறியது. பின் அரசே ரோடு அமைத்ததை தொடர்ந்து மக்கள் வீடு கட்டி வசிக்கின்றனர். ஒரு தலைமுறையை கடந்து வசித்து வருகின்றோம். திடீரென்று கோர்ட் உத்தரவு என்று எங்கள் வீடுகளை இடிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளனர் என்று புலம்புகின்றனர். இந்நிலையில் நோட்டீஸ் வழங்கிய பின் ராயப்பன்பட்டி ஊராட்சியில் ரோடு போடும் பணிகளை மேற்கொண்டது நீர்வளத்துறையை கொந்தளிக்க செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ