உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடியில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்... அமைக்கப்படுமா; விபத்துக்களை தடுக்க நடவடிக்கை அவசியம்

போடியில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்... அமைக்கப்படுமா; விபத்துக்களை தடுக்க நடவடிக்கை அவசியம்

தேனி: ‛‛போடி -- மதுரை அகல ரயில்பாதையில் அடிக்கடி நடக்கும் விபத்துக்களை தடுக்கவும், விபத்து வழக்குகளில் விசாரணையை ரயில்வே போலீசார் விரைந்து துவக்கிடும் வகையில் போடி அல்லது தேனியில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும்.'' என பயணிகள், மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். போடி -மதுரை அகல ரயில் பாதையில் தற்போது காலையில் மதுரை முதல் போடி வரை பயணிகள் விரைவு ரயிலும், வாரத்தின் மூன்று நாட்களில் போடி -- சென்னை அதிவிரைவு ரயிலும் இயங்கி வருகின்றன. இதுதவிர மதுரை முதல் போடி வரை உள்ள 91.4 கி.மீ., துார அகல ரயில் பாதையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சரக்கு ரயிலும், மின்வழித்தட சீரமைப்பு பணிக்கான ‛டவர் கார் எலக்ட்ரிக் வேஹான் இன்ஜினும்'அடிக்கடி அகல ரயில்பாதையில் வந்து செல்கின்றன. போடியில் இருந்து மதுரைக்கு காலையில் ஒரு பயணிகள் விரைவு ரயிலையும், போடி முதல் சென்னைக்கு வாரத்தின் மூன்று நாட்கள் இயங்கிவரும் அதிவிரைவு ரயிலையும் தினசரி இயக்க போடி கார்டமம் ரயில் பயனாளர்கள் சங்கம், ரயில்வே பயணிகள் கோரிக்கை வலியுறுத்தி வருகின்றனர்.இந்த ரயில் பாதை வழித்தடத்தில் விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த ஆக.8ல் தேனி பாரஸ்ட் ரோடு 5வது தெருவில் வசிக்கும் ஹோட்டல் கூலித் தொழிலாளி அருள் ஆனந்தியின் 14 வயது மகன் கோகுல் ரயில் விபத்தில் பலியானார். இதற்கு முன் குன்னுாரில் ரயில்வே மேம்பாலத்தில் வெளியூரில் இருந்து டூவீலரில் வந்த ஆண், பெண் தற்கொலை செய்தனர். அதற்கு முன் 2023 மார்ச் 23ல் அகலரயில்பாதை சோதனை ஓட்ட ரயில் போடியில் இருந்து மதுரை சென்ற போது மதுரை ரோடு தனியார் பள்ளி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெரியகுளம் வடகரையை சேர்ந்த ராஜா 19, பலியானார். அன்றே ஒரு மணி நேரத்திற்கு முன் சோதனை ரயில் போடி நோக்கி சென்ற போது பங்களாமேடு அண்ணாநகரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆண்டிபட்டி கணேசபுரத்தை சேர்ந்த லட்சுமி 45, மீது ரயில் மோதி துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இந்த 2 விபத்துகளும் ஒரு மணி நேர இடைவெளியில் நடந்தது. இந்த விபத்துக்களை தற்போது மதுரை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்காக போடியில் ஒரு சிறப்பு எஸ்.ஐ., ஒரு ஏட்டு, 2 போலீஸ்காரர்கள் மட்டுமே உள்ளனர். விசாரணை அதிகாரி மதுரையில் இருந்து சம்பவ இடத்திற்கு வருவதற்குள் 2 மணி நேரம் கடந்து விடுகிறது. விசாரணை அதிகாரி வராமல் விபத்து நடந்த உடல் பாகங்களை கூட அகற்ற முடியாமல் போலீசார் மிகுந்த சிரமங்களை சந்திந்து வருகின்றனர். எனவே, போடி அல்லது தேனி ரயில்வே ஸ்டேஷன்களில் நிரந்தர போலீஸ் ஸ்டேஷனை உடனடியாக அமைக்க வேண்டும். அதில் ஒரு எஸ்.ஐ., தலைமையில் 32 பேர் அடங்கிய போலீசார் உள்ள ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என பொது மக்கள், ரயில் பயனாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ