மனு வழங்கவில்லை என்றால் அலுவலர்கள் மீது நடவடிக்கையா ஊரக வளர்ச்சித்துறையினர் குமுறல்
தேனி: ''மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அதிக மனுக்கள் பெற வில்லை என்றால் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.'' என, உயர் அதிகாரிகள் கூறுவதாக ஊரக வளர்ச்சித்துறையினர் புலம்பி வருகின்றனர். தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஜூலை 15 முதல் நடந்து வருகிறது. இம்முகாம் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் என பிரித்து நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட முகாமில் ஆக.14 வரை 36 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டிருந்தன. ஆனால், இரண்டாம் கட்ட முகாம்களில் குறைந்த அளவில் தான் பொது மக்கள் மனுக்கள் வழங்கி வருகின்றனர். ஒரு முகாம் நடத்த தோராயமாக ரூ.ஒரு லட்சம் வரையில் செலவு செய்யப்படுகிறது. அதனால் ஊரக பகுதிகளில் போதிய அளவில் மனுக்கள் பெற வேண்டும். முகாம் முடிந்த பகுதிகளிலும் ஏதேனும் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்று இணையத்தில் பதிவேற்ற வேண்டும். நடக்க உள்ள முகாம்களில் அதிக எண்ணிக்கையில் மனுக்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறையினருக்கு உயர் அதிகாரிகள் கூறி உள்ளனராம். இதனால், 'பொது மக்கள் மனு வழங்காவிட்டால் நாங்கள் என்ன செய்வது, முகாம் திட்டமிடலில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் புலம்பி வருகின்றனர்.