ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு டாக்டர்கள்... நியமிக்கப்படுவார்களா:பணியிடம் இல்லாததால் முதல் பிரசவம் பார்ப்பதில் சிக்கல்
மாவட்டத்தில் 8 வட்டார ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டில் 26 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. உத்தமபாளையம், சின்னமனுார், போடி, ஆண்டிபட்டி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைவான பிரசவங்கள் நடக்கின்றன. சுகப்பிரசவம் என்றால் மட்டுமே வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒன்றிரண்டு பிரசவங்கள் நடக்கின்றன. இதனால் கிராமங்களில் வசிக்கும் பெண்கள் பிரசவ சிகிச்சை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகளிர்நலயியல் மற்றும் மகப்பேறியல் (Obstetrics and Gynaecology (-OB/GYN) படித்த டாக்டர்கள் பணியிடம் இல்லாததே இதற்கு காரணமாகும். பாதிக்கப்பட்ட சிலர் கூறியதாவது: ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதத்திற்கு 40 முதல் 60 பிரசவங்கள் நடக்கின்றன. வட்டாரத்திற்கு ஒரு டி.ஜி.ஓ., டாக்டர் மட்டுமே உள்ளனர். அந்த டாக்டரும் வாரம் ஒரு முறை மட்டுமே வருகிறார். அவர்கள் அங்குள்ள கர்ப்பிணிகளை பரிசோதித்து எங்கு பிரவசம் பார்க்க வேண்டும் என, தீர்மானிக்கின்றனர். முதல் பிரசவம் பார்க்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ள கர்ப்பிணிகளை 7 வது மாதத்தில் இருந்தே மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வாரம் ஒரு முறை அனுப்புகின்றனர்., என்றனர். மருத்துவம் படித்த டாக்டர்களை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும், மருத்துவம் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் அரசு மருத்துவமனைகளிலும் நியமிக்கின்றனர். எம்.பி.பி.எஸ்., படித்தவர்களை மட்டுமே ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்க வேண்டும் என்ற விதிமுறையில் தான் சிக்கல் உள்ளது. எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்க டி.ஜி.ஒ., படித்த டாக்டர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் கிராமப்புற பெண்கள் எளிதாக பிரசவம் பார்க்க வசதி ஏற்படும்.