தேனியில் வீட்டில் நுழைந்து பெண் வெட்டிக்கொலை
தேனி:தேனி அல்லிநகரத்தில் வீட்டிற்குள் நுழைந்து 35 வயது பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பிச் சென்ற கொலையாளி யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.தேனி அல்லிநகரம் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் லீலாவதி 35. கணவர் சின்னச்சாமி. சிலஆண்டுகளுக்கு முன் இறந்தார். இத் தம்பதிக்கு மகன் காமேஷ் 21, மகள் கவுசல்யா 20, உள்ளனர். மகன் கோவை மில்லில் பணிபுரிகிறார்.கவுசல்யாவிற்கும், திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு, மீனாட்சிபுரம் லாரி டிரைவர் பிச்சைமுத்துக்கும் 26, ஒன்பது மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.6 மாதங்களுக்கு முன் கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்த கவுசல்யா, தேனி மகளிர் ஸ்டேஷனில், 'கணவருடன் வாழ விருப்பமில்லை. ஊர் பஞ்சாயத்தில் பேசி முடித்து கொள்கிறோம்.' என எழுதி கொடுத்துவிட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.நேற்று காலை கவுசல்யா துணிகடைக்கு வேலைக்கு சென்றார். லீலாவதி மாடி வீட்டின் சமையலறையில் இருந்தார். அப்போது காலை 8:30 மணிக்கு துணியால் முகத்தை மூடியவாறு வீட்டில் நுழைந்த மர்மநபர், மாடிக்கு சென்று, லீலாவதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரிவாளால் கழுத்து, கைகளில் வெட்டி கொலை செய்தார். பின் துணியால் முகத்தை மூடியபடி கீழே இறங்கி சென்றுள்ளார். மாடியில் சத்தம் கேட்டு கீழ் வீட்டில் வசிக்கும் பெண் மேலே சென்று பார்த்தபோது, லீலாவதி சமைலறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.அப்பெண், போலீசாருக்கு தகவல் அளித்தார். ஏ.டி.எஸ்.பி., சுகுமாறன், அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் இளவரசு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் சம்பவம் நடந்த மாடி வீட்டில் இருந்து கீழே இறங்கி அல்லிநகரம் தெற்குத்தெரு வழியாக காந்திஜிநகர் வரை சென்று, நின்றது.லீலாவதியின் உடல் தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பப்பட்டது. தனிப்படை அமைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.கொலை நடந்த இடத்தில் அரிவாள் கைப்பற்றப்பட்டது. அருகில் உள்ள ஏ.டி.எம்.,மில் உள்ள வீடியோ பதிவில் மர்ம நபர் வீட்டிற்கு வந்து சென்றது பதிவாகியுள்ளது. அந்த வீடியோப் பதிவை கைப்பற்றிய போலீசார் கொலை செய்தவர் யார், காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்கின்றனர்.