உலகளவில் இந்தியாவை உயர்த்துவதில் பெண்களின் பங்களிப்பு அவசியம் மகளிர் பல்கலை துணை வேந்தர் பேச்சு
பெரியகுளம்: 'உலகளவில் இந்தியாவை சிறந்த நாடாக உயர்த்துவதில் பெண்களாகிய நாம் முழுமையாக ஈடுபட வேண்டும்' என பட்டமளிப்பு விழாவில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை துணைவேந்தர் கலா பேசினார்.பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சேசுராணி தலைமை வகித்தார். செயலர் சாந்தாமேரி ஜோஷிற்றா, நுாலகப் பொறுப்பாளர் பாத்திமாமேரி சில்வியா, தேர்வு ஆணையர் இருதய லுார்து கிளாடிஸ் முன்னிலை வகித்தனர். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையின் துணை வேந்தர் கலா மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது: போட்டிகள் நிறைந்த உலகில் பெண்கள் குடும்பம், சமூகத்தில் காணப்படும் சாவல்களை எதிர்கொள்வதற்கு, உங்களிடத்தில் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும். பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, தேசிய மனிதவள மேம்பாட்டுத் துறைகளில் தங்களை ஈடுபடுத்தி பெண்கள் தலைமைத்துவ பண்புகளில் சிறந்து விளங்கி முன்னேற வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பெண்களுக்கான நலத்திட்டங்களை பயன்படுத்தி தொழில் முனைவோர்களாக மேம்பட வேண்டும். இந்தியாவை உலகளாவிய நாடுகளில் சிறந்த நாடாக உயர்த்துவதில் பெண்களாகிய நாம் முழுமையாக ஈடுபட வேண்டும்., என்றார். இளங்கலை, முதுகலை, சான்றிதழ் படிப்பு முடித்த 720 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அனைத்துத்துறைத் தலைவர்கள், பேராசிரியைகள், மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.-