லாரி மீது கார் மோதி இருவர் பலி
திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே அதிகாலையில் 4 வழிச்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலியாயினர்.கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அருகே குறப்புலம் கல்வெட்டான்குழியை சேர்ந்தவர் ஜெயச்சந்திர சிங் 50. குழித்துறை அரசு போக்குவரத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஷெரின் 47. அரசு பள்ளி ஆசிரியை. மகள் அபி ஷெரின். இவருக்கு ஈரோடு பகுதி மருத்துவக் கல்லுாரியில் சீட் கிடைத்துள்ளது. மகளை மருத்துவக் கல்லுாரியில் சேர்ப்பதற்காக ஜெயச்சந்திரசிங் அவரது மனைவி ஷெரின், அபி ஷெரின், ஜெயச்சந்திர சிங்கின் சகோதரி ஜெயந்தி 55, ஆகியோருடன் ஈரோடு சென்றார். பின்னர் நான்கு பேரும் ஊர் திரும்பினர். நேற்று அதிகாலையில் திருநெல்வேலி அருகே நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் வந்த போது குறுகலான பகுதியில் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற ஜெயச்சந்திர சிங்கின் கார் லாரி மீது மோதியது. இதில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. காரை ஓட்டிய ஜெயச்சந்திர சிங்கும், ஜெயந்தியும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமுற்ற ஷெரின் மற்றும் மகள் அபி ஷெரின் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.