உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / காங்., தலைவர் மரண வழக்கு தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

காங்., தலைவர் மரண வழக்கு தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

திருநெல்வேலி:திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் 58, இறந்து கிடந்த தோட்டத்தில் சென்னை, மதுரை, கோவையிலிருந்து வந்திருந்த தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.ஜெயக்குமார் கடந்த 4ம் தேதி எரிந்த நிலையில் கரை சுத்துபுதூரில் உள்ள அவரது வீட்டு தோட்டத்தில் இறந்து கிடந்தார். அவர் உடலை சுற்றி இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டு இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரித்தனர். ஜெயக்குமார் கடிதங்களின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை முடிந்து விட்டது. அவரது தனிப்பட்ட பிரச்னைகளால் கூலிப்படையினர் இதில் ஈடுபட்டு இருக்கலாமா எனவும் பல்வேறு தனிப்படையினர் விசாரித்தனர்.வீட்டு தோட்டத்து கிணற்றிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டதில் கிடைத்த கத்தி, சோப்பு டப்பா போன்றவை குறித்தும் ஆய்வு நடக்கிறது.சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட தடயவியல் நிபுணர்கள் கரைசுத்துபுதூர் தோட்டம், வீடு சுற்று வட்டார பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவருக்கு நெருக்கமானவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளாரா எனவும் அதனை நிரூபிப்பதற்கான தடயங்களை சேகரிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

எஸ்.பி.வேண்டுகோள்

திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் நேற்று பத்திரிகையாளர்களை அழைத்து பேசினார். விசாரணை நடக்கும் பகுதியில் மீடியா குழுவினர் கேமராக்கள் மூலம், தடயங்களை ஆவணங்களை மிக நெருக்கமாக படம் பிடித்து வெளியிடுவதாலும், போலீசார் விசாரணை மேற் கொள்பவர்களிடம் பேட்டி எடுத்து வெளியிடுவதாலும் ஒரு இணை விசாரணை போல நடக்கிறது. இது வழக்கின் விசாரணையை பாதிக்கிறது.எனவே விசாரணைக்கு ஒத்துழைக்க கேட்டுக் கொண்டார். அவரிடம் பத்திரிகையாளர்கள், 'முன்னர் எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து பத்திரிகையாளர்களுக்கு குற்ற வழக்குகள் குறித்து முறையாக தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் சமீப காலமாக தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. அதை முறைப்படுத்த வேண்டும்' எனவும் கோரிக்கை விடுத்தனர்

சிதம்பரம் வருகை

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கரைசுத்துபுதூர் வந்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளராக உள்ள ஜெயக்குமாரின் அண்ணன் செல்வராஜ் வீட்டில், குடும்பத்தினரை சந்தித்து சிதம்பரம் ஆறுதல் கூறினார்.போலீஸ் உயரதிகாரிகளிடம் துரித நடவடிக்கைக்கு பேசுவதாக தெரிவித்தார். காங்கிரஸ் பிரமுகர்கள் வானமாமலை, சிவாஜி முத்துக் குமார் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி