பார்வையற்றவரை இறக்கிவிட்ட அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்
திருநெல்வேலி : தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூரைச் சேர்ந்தவர் கந்தசாமி 55. பார்வையற்ற மாற்றுத்திறனாளி.தற்போது இவர் பாவூர்சத்திரத்தில் வசித்து வருகிறார். ரேஷன் அட்டை பொட்டல்புதூரில் இருப்பதால் மாதம் தோறும் அங்கு சென்று அரிசி, சீனி வாங்கி வருவார். நேற்றும் வழக்கம் போல மனைவியுடன் பொட்டல்புதூர் சென்று ரேஷன் அரிசி 5 கிலோ, மற்றும் சீனி வாங்கினார்.பின் இருவரும் அகஸ்தியர்பட்டியில் இருந்து பாவூர்சத்திரம் சென்ற அரசு பஸ்சில் பயணித்தனர். கண்டக்டர் பழனிசாமி, கந்தசாமிக்கு பார்வையற்றவருக்கான இலவச பயண சீட்டு வழங்கினார். மேலும் 5 கிலோ ரேஷன் அரிசிக்கு லக்கேஜ் வாங்க வேண்டும் என்றார். மேலும் அவதூறாக பேசியதுடன் மனைவியுடன் அவரை திருமலையப்பபுரம் -- முதலியார்பட்டி ரோட்டில் நடுவழியில் இறக்கி விட்டார்.இதுகுறித்து புகாரின்படி போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். பஸ் டிரைவர் தற்காலிகமானவர் என்பதால் அவரை பணி நீக்கம் செய்தனர். கண்டக்டர் பழனிசாமியை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டனர்.