பள்ளி மாணவர்கள் மோதல் 15 பேருக்கு தண்டனை
வன்னிகோனேந்தல்:நெல்லை மாவட்டம், வன்னிகோனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில், 9-ம் வகுப்பு மாணவன் வாங்கிய தின்பண்டத்தை பிளஸ் 2 மாணவர்கள் பறித்து தாக்கியதால், மோதல் ஏற்பட்டது. இதில் 9ம் வகுப்பு மாணவனும் தன் நண்பர்களை அழைத்து வந்து சண்டையில் ஈடுபட்டார். ஆசிரியர்கள் தடுக்க முயன்றும் மாணவர்கள் அடங்கவில்லை. பள்ளி நிர்வாகம் புகார் அளித்ததை அடுத்து, தேவர்குளம் போலீசார் சம்பந்தப்பட்ட 15 மாணவர்களையும் கைது செய்து, சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர். நீதி குழும நடுவர்கள் விசாரணை நடத்தி, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதுடன், ஒழுக்கமாக தலைமுடியை வெட்டி பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன் வினாத்தாளில் உள்ள, ஒரு மதிப்பெண் கேள்வி - பதில்களை எழுதி, நீதி குழுமத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். வன்னிகோனேந்தல் அரசு பள்ளியில், மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் கல்விச்சூழலை பாதிப்பதாக பள்ளி வட்டாரங்கள் தெரிவித்தன.