உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருநெல்வேலி அருகே தலித் வாலிபர் கொலையில் 4 பேர் கைது கொலை முயற்சி குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அஜாக்கிரதை

திருநெல்வேலி அருகே தலித் வாலிபர் கொலையில் 4 பேர் கைது கொலை முயற்சி குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அஜாக்கிரதை

திருநெல்வேலி:ராதாபுரம் அருகே பட்டியல் இன வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதே கும்பல் அவரை ஏற்கனவே இரண்டு முறை காரை மோதி கொலை செய்ய திட்டமிட்டது குறித்து ராதாபுரம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே சங்கநேரியை சேர்ந்த பீட்டர் மகன் பிரபுதாஸ் 27. பட்டியல் இன வாலிபர். மர வேலைகள் செய்து வந்தார். ஆக., 6ம் தேதி தமிழரசன் என்பவருடன் டூவீலரில் சென்றார். சங்கநேரியில் இருந்து கோலியன்குளம் செல்லும்போது அவரை ஒரு கும்பல் தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்தது. இந்த சம்பவத்தில் டூவீலர் ஓட்டிய தமிழரசனும் தாக்கப்பட்டதால் மயக்கமடைந்தார். ஆரம்பத்தில் இதனை விபத்து என தெரிவித்தனர். ஆனால் பிரபுவின் உறவினர்கள் இது கொலைதான் எனவும் அவர் மீது ஏற்கனவே இரண்டு முறை வாகனம் மோதி கொலை முயற்சிகள் நடந்தன. இது குறித்து ராதாபுரம் போலீசில் புகார் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலை தொடர்பாக போலீசார் நேற்று கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த வினோத் 42, லிங்கசாமி 23, மகாராஜன் 22, திசையன்விளையைச் சேர்ந்த அருண்குமார் 24, ஆகியோரை கைது செய்தனர். போலீஸ் அஜாக்கிரதை... பிரபுதாஸ் மீது ஏற்கனவே ஒரு கும்பல் முன் விரோதத்தில் இருந்தது. அவர்கள் அவரை இரண்டு முறை போனில் அழைத்து காரை மோதி கொலை செய்ய திட்டமிட்டனர். 15 நாட்களுக்கு முன் இதே ரோட்டில் அவர் மீது காரை மோதி நடந்த கொலை முயற்சியில் உயிர் தப்பினார். பலத்த காயங்களுடன் ராதாபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த காரின் நம்பர் பிளேட் சம்பவ இடத்தில் கிடந்தது. அதையும் எடுத்து சென்று இது கொலை முயற்சி என ராதாபுரம் போலீசில் புகார் செய்திருந்தார். ஆனால் ஒரு பெண் போலீஸ் அதிகாரி உட்பட ராதாபுரம் போலீசார் முறையாக விசாரிக்காமல் விபத்து என அஜாக்கிரதையாக இருந்ததால் அந்த கும்பல் தப்பியது. மீண்டும் அவரை பழி தீர்த்துள்ளது. போலீசார் அந்த நம்பர் பிளேட்டை வைத்து காரின் உரிமையாளர், கொலையாளிகளை விசாரித்து இருந்தால் இந்த கொலை நடந்திருக்காது என பிரபுதாஸின் உறவினர்கள் நேற்று தெரிவித்தனர். இந்தக் கொலையில் கூடங்குளத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை