உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருநெல்வேலியில் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட கல்குவாரி ஆதரவு கும்பல்

திருநெல்வேலியில் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட கல்குவாரி ஆதரவு கும்பல்

திருநெல்வேலி: திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் அருகே கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து அறப்போர் இயக்கம் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கல் குவாரி உரிமையாளர்களின் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர். சேர்களை தூக்கி வீசியதில் பலர் காயமுற்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் கல்குவாரிகள் செயல்படுகின்றன. இதனால் தூசு படர்ந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கருத்து அறிய அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு சார்பில் கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் அருகே தனியார் மண்டபத்தில் நடந்தது. அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ், கிராம சபை வல்லுநர் நந்தகுமார், சுற்றுச்சூழல் நிபுணர் தணிகைவேல், நீர் மேலாண்மை நிபுணர் உதயகுமார், விவசாய ஆர்வலர் நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராதாபுரம் பகுதியில் அதிக எண்ணிக்கையில் செயல்படும் கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் கருத்து தெரிவித்து கொண்டிருந்தனர். அப்போது கூட்ட அரங்கிற்குள் கல் குவாரி உரிமையாளர்களின் ஆதரவாளர்கள் 25 பேர் வந்து அமர்ந்தனர். அதில் வினோத்குமார் என்பவர்,''அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் ஏற்கனவே யுடியூப்களில் அளித்துள்ள பேட்டியில் கல்குவாரி நடத்துபவர்களை திருடர்கள் என விமர்சித்துள்ளார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றார். பதில் அளித்த வழக்கறிஞர் சுரேஷ், ''கல்குவாரி குறித்த கருத்துகள் இருந்தால் தெரிவியுங்கள். யுடியூபில் வந்த கருத்துகளுக்கு நீங்கள் தனியாக புகார் அளித்தோ, சட்டப்பூர்வமாகவோ நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்றார். ஆனால் ரகளை செய்யும் நோக்கத்துடன் வந்த அக்கும்பலில் இருந்தவர்களில் சிலர் திடீரென பிளாஸ்டிக் சேர்களை தூக்கி வீசினர். வழக்கறிஞர் சுரேஷ் தலையில் சேர் விழுந்து ரத்தக் காயம் ஏற்பட்டது. குவாரி குறித்து கருத்து கூற வந்த இடைகால் தர்மராஜ் என்பவரை கும்பலில் ஒருவர் தாக்கினார். சரமாரியாக சேர்கள் வீசப்பட்டதில் மேலும் சிலர் காயமடைந்தனர். போலீசார் உள்ளே வந்து அமைதிப்படுத்தினர். சேர்களை வீசிய ஒருவரை போலீசார் வெளியே இழுத்துச் சென்றனர். ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது: கூட்டத்தை நடத்த விரும்பாதவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். பின்னணியில் தி.மு.க.,வினர் உள்ளனர். காயமுற்ற வழக்கறிஞர் சுரேஷ் புகார் அளிக்க வேண்டாம் என கூறினார். இருப்பினும் புகார் தெரிவித்துள்ளோம் என்றார். கல்குவாரி உரிமையாளர்கள் ஆதரவாளர்களுடன் வந்த வினோத்குமார் கூறியதாவது: இந்த இயக்கத்தினர் கல்குவாரி உரிமையாளர்களை திருடர்கள் என யுடியூபில் தெரிவித்துள்ளனர். இவர்கள் கேரளாவில் உள்ள கல்குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக திருநெல்வேலி மாவட்டத்தை மட்டும் குறி வைத்து இத்தகைய பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர் என்றார். போலீஸ் தரப்பில், 'இந்த உள்ளரங்க கூட்டத்திற்கு முறைப்படி அனுமதி பெறவில்லை. எனவே எங்களால் உடனே தடுக்க முடியவில்லை,' என தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே நான்கு பேர் இறந்த அடை மிதிப்பான் குளம் கல்குவாரி அருகில் புதிய கல்குவாரி அமைய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு அதிகரிப்பதால் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஏற்பாட்டில் நேற்று ரகளை நடந்ததாக பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். ரகளை நடந்ததை அறிந்தும் போலீசாரும் கண்டு கொள்ளாமல் விட்டனர் எனவும் குற்றம்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை