உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / 22 நிமிடங்கள் பேசிய அமித்ஷா

22 நிமிடங்கள் பேசிய அமித்ஷா

திருநெல்வேலி:திருநெல்வேலியில் நடந்த பா.ஜ., பூத் கமிட்டி முதல் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 22 நிமிடங்கள் பேசினார். தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பூத் கமிட்டி முதல் மண்டல மாநாடு நேற்று திருநெல்வேலி, தச்சநல்லுார் பகுதியில் நடந்தது. கேரள மாநிலம் கொச்சியில் இரு ந்து விமானம் மூலம் துாத்துக்குடிக்கு வந்த அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி வந்தார். திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அமித்ஷாவுக்கு கலெக்டர் சுகுமார், கமிஷனர் சந்தோஷ், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர். பெருமாள்புரத்தில் உள்ள நயினார் நாகேந்திரன் வீட்டில் அவருக்கு தேனீர் விருந்து அளிப்பதாக இருந்தது. ஆனால் விமானம் தாமதம் காரணமாக முதலில் மாநாட்டு திடலுக்கு சென்றார். மாலை 4:10 மணிக்கு மாநாட்டு திடலுக்கு அமித்ஷா வந்தார். மேடையில் பா.ஜ., பிரமுகர்கள் அண்ணாமலை, சுதாகர் ரெட்டி, தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி, எம். ஆர். காந்தி, சரத்குமார்,பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., விஜயதரணி, மாநிலத் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், கேசவ விநாயகம், உள்ளிட்டோர் இடம்பெற்றனர். மேடையில் எச்.ராஜா பேசிக் கொண்டிருந்தபோது அமித்ஷா மேடைக்கு வந்தார். அதன் பிறகு அண்ணாமலையும் நயினார் நாகேந்திரனும் மட்டும் பேசினர். சுமார் 22 நிமிடங்கள் அமித்ஷா பேசினார். அவரது உரையை ஸ்ரீகாந்த் தமிழில் மொழிபெயர்த்தார். அமித்ஷாவின் உரை ஆக்ரோஷமாக இருந்தது. அவர் ஹிந்தியில் பேசும் போதே என்ன சொல்ல வருகிறார் என புரிந்து கொண்ட கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது. விழா மேடையில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் ஒட்டுமொத்த கூட்டமும் ஆர்ப்பரித்து வாழ்க கோஷம் எழுப்பியது. 5:30 மணிக்கு விழா முடிந்து அமித்ஷா காரில் நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு தேநீர் விருந்தில் பங்கேற்க சென்றார். மாலை 6:00 மணிக்கு பிறகு ஹெலிகாப்டர் கிளம்ப முடியாது என்பதால் அவர் அங்கிருந்து துாத்துக்குடி விமான நிலையத்திற்கு காரில் சென்றார். அங்கிருந்து விமானத்தில் டில்லி சென்றார். தங்க விநாயகர் சிலை பரிசு பா.ஜ., பூத் கமிட்டி மாநாடு என்றாலும் மாநாட்டின் முகப்பில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் வடிவில் முகப்பு அமைக்கப்பட்டிருந்தது. பூத் கமிட்டி உறுப்பினர்கள் என்றாலும் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் வயதான மூதாட்டிகளும் தாத்தாக்களும் இருந்தனர். பூத் கமிட்டி மட்டுமல்லாது கட்சியின் உறுப்பினர்களும் பெரும்பாலும் பங்கேற்றனர். ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமித்ஷாவே வந்திருந்த 25 ஆயிரம் பேருக்கு நன்றி என தெரிவித்தார். நயினார் நாகேந்திரன் வீட்டில் தேநீர் விருந்தில் 35 வகையான இனிப்பு கார வகைகள் வைக்கப்பட்டிருந்தன. அமித்ஷா இனிப்பு காரம் எடுத்துக் கொண்டதோடு கடுங்காப்பி அருந்தினார். பா.ஜ., பிரமுகர் கணேஷ் மணி அய்யர், அமித்ஷாவுக்கு தங்கத்திலான விநாயகர் சிலை பரிசளித்தார். அந்த விநாயகர் சிலையை தமது காரில் வைக்குமாறு அமித்ஷா தெரிவித்துள்ளார். பூத் கமிட்டி என்ற பெயரில் வழக்கமான பா.ஜ.,வின் மாநாடு தான் நடந்தது. யாரிடமும் தனியாக பேசவும் கருத்து கேட்கவும் வாய்ப்பில்லை. கொளுத்தும் வெயிலில் 2:00 மணிக்கே தொண்டர்கள் வந்தனர். மாலை 5:30மணிக்கு மாநாடு நிறைவு பெற்றது. பத்திரிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். வீடியோகிராபர்கள், புகைப்பட கலைஞர்கள் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை