அமித்ஷா நாளை திருநெல்வேலி வருகை
திருநெல்வேலி:திருநெல்வேலியில் நாளை நடக்கும் தென் மண்டல பா.ஜ., பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க வருகிறார். சட்டசபை தேர்தலுக்கு முன் மண்டலங்கள் தோறும் பூத் கமிட்டி மாநாடுகளை நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது. முதல் மண்டல பூத் கமிட்டி மாநாடு நாளை திருநெல்வேலியில் நடக்கிறது. வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலை முடிவுறும் தச்சநல்லூர் பகுதியில் இதற்காக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்காக வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று மத்திய பாதுகாப்பு படையினரின் முன்னிலையில் ஹெலிகாப்டர்கள் இறங்கி சோதனை நடத்தப்பட்டது. மூன்று ஹெலிகாப்டர்கள் வருவதால் அங்கு போதிய இடமின்மை காரணமாக அக்கல்லூரிக்கு பதிலாக திருநெல்வேலி ஆயுதப்படை போலீஸ் மைதானம் மற்றும் ஜான்ஸ் பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின் ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் கொச்சி ஏர்போர்ட்டில் இருந்து நாளை மதியம் 2:00 மணிக்கு விமானத்தில் புறப்படும் அமித்ஷா துாத்துக்குடி விமான நிலையத்திற்கு மதியம் 2:50 மணிக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருநெல்வேலி மாவட்ட கோர்ட் அருகே உள்ள ஜான்ஸ் பள்ளி வளாகத்திற்கு மதியம் 3:10 மணிக்கு வருகிறார். மாநாடு முடிந்ததும் மீண்டும் மாலை 5:10 மணிக்கு ஹெலிகாப்டரில் தூத்துக்குடி செல்கிறார். பின் அங்கிருந்து விமானத்தில் டில்லி செல்கிறார்.