துணை இயக்குனரை சிக்க வைக்க முயற்சி 3 தீயணைப்பு அலுவலரிடம் விசாரணை
திருநெல்வேலி: திருநெல்வேலி தீயணைப்பு துணை இயக்குனர் சரவணபாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க முயன்ற வழக்கில் தொடர்புடைய மூன்று மாவட்ட தீயணைப்பு அலுவலர்களிடம் போலீஸ் துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் நேற்று விசாரணை நடத்தினார். துணை இயக்குனர் சரவணபாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க தீயணைப்பு துறையினரே அவரது அலுவலகத்தில் நள்ளிரவில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை வைத்தனர். அவர்களது புகாரின்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து அந்த பணத்தை எடுத்தனர். சரவணபாபு மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் சரவணபாபு அலுவலகத்திற்கு எதிர் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் இரவில் பணம் வைக்கப்பட்ட விஷயம் தெரியவந்தது. இது குறித்து சரவணபாபு புகாரின்படி பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீயணைப்புத்துறை வீரர்கள் ஆனந்த், மூர்த்தி, முருகேஷ் மற்றும் பணம் வைத்த விஜய், உதவிய முத்து சுடலை ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான திருப்பூர் தீயணைப்பு அலுவலர் வீரராஜ் தேடப்படுகிறார். அவரை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. அவர் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தலைமறைவான அவர் சஸ்பெண்ட் செய்யப்படாதது சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இச்சம்பவத்தின் போது தொடர்புடைய நபர்களுடன் அடிக்கடி அலைபேசியில் பேசி இந்த கூட்டு திட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், சென்னை எழும்பூர் தீயணைப்பு அலுவலர் மோரீஸ், கோயமுத்தூர் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அழகர்சாமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று மூவரும் காலை ஆஜராயினர். அவர்களிடம் போலீஸ் துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் விசாரணை நடத்தினார். இன்றும் விசாரணை தொடர்கிறது.