நெல்லையில் 2,115 இடத்தில் ஜாதிய குறியீடுகள் அகற்றம்
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில், 2,115 பொது இடங்களில் ஜாதிய குறியீடு அடையாளங்கள் அகற்றப்பட்டன. இம்மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஜாதி ரீதியான மோதல்கள் ஏற்படுத்தும் தீமைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். மாணவர்கள் கைகளில் கட்டி வரும் வண்ண கயிறுகள், நெற்றி பொட்டுகளில் ஜாதி அடையாளங்களை அணியும் பழக்கத்தை தவிர்க்க வலியுறுத்துகின்றனர். எஸ்.பி., சிலம்பரசன் உத்தரவில், பொது இடங்களில் மின்கம்பங்கள், பஸ் ஸ்டாண்டுகள், பாலங்கள், கிராம நுழைவு பலகைகள், பொது சுவர்கள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட இடங்களில் காணப்பட்ட ஜாதிய குறியீட்டு அடையாளங்கள், வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டன. இதுவரை, மாவட்டம் முழுதும், 313 கிராமங்களில், மொத்தம், 2,115 இடங்களில் ஜாதிய குறியீடு அடையாளங்கள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.