உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ரூ.2 கோடி அரசு பூங்கா நிலம் அபகரிப்பு மீட்க மாநகராட்சி, பதிவுத்துறை தீவிரம்

ரூ.2 கோடி அரசு பூங்கா நிலம் அபகரிப்பு மீட்க மாநகராட்சி, பதிவுத்துறை தீவிரம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா நிலங்களை போலி பத்திரம் மூலம் அபகரிக்கும் கும்பலிடமிருந்து மீட்க மாநகராட்சி, பதிவுத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.திருநெல்வேலி மாநகராட்சி என்.ஜி.ஓ.காலனி பொதிகைநகரில் 1990ல் இந்திரா நகர் குடியிருப்பு உருவாக்கப்பட்டது. 10 சென்ட் நிலம் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்டது. 1994 க்கு பிறகு பூங்கா நிலத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் அந்த இடம் பயன்படுத்தாமல் இருந்தது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.2 கோடி.சமீபத்தில் அந்நிலம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி சிலர் மேலப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து வார்டு கவுன்சிலர் சங்கீதா ராதா சங்கர் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அதனையடுத்து நிலத்தை மீட்கும் நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. மேயர் ராமகிருஷ்ணன் நிலத்தை பார்வையிட்டு மீட்க உத்தரவிட்டார். நகரமைப்பு திட்ட அதிகாரி கெவின் ஜாய், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளருக்கு விடுத்துள்ள உத்தரவில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை தனி நபர்கள் பத்திரப்பதிவு செய்துள்ளதை ரத்து செய்து மீட்டெடுக்கவும் அங்கு விளம்பரப் பலகை வைத்து பூங்காவாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இதற்கிடையே இம்மாநகராட்சி பகுதியில் 10க்கும் மேற்பட்ட பூங்கா ஓ.எஸ்.ஆர். நிலங்கள் மீது முறைகேடாக பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படுவது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. பத்திரப்பதிவு உயர் அதிகாரிகள் இந்த மோசடியில் தொடர்புடைய சார் பதிவாளர்கள் மற்றும் போலி நில உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் களம் இறங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ