அடுத்தடுத்து கைதாகும் ஊழியர்கள்; தீயணைப்பு துறையில் பற்றி எரியும் தீ
திருநெல்வேலி: திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குநரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்க வைக்க முயன்ற வழக்கில், மேலும் இரு தீயணைப்பு வீரர்கள் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குநர் சரவணபாபு, 50. இவரை லஞ்ச ஒழிப்பு வழக்கில் சிக்க வைக்க, அவரது அலுவலகத்தில் நள்ளிரவில் பணம் வைக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இதை கண்டறிந்த போலீசார், பணத்தை வைத்த விஜய் என்பவரை நேற்று முன்தினம் மும்பையில் கைது செய்தனர். ஏற்கனவே இவ்வழக்கில் துாத்துக்குடி தீயணைப்பு வீரர் ஆனந்த், அவரது உறவினர் முத்து சுடலை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்திய திருநெல்வேலி டவுன் தீயணைப்பு வீரர் மூர்த்தி, சென்னை அம்பத்துார் தீயணைப்பு வீரர் முருகேசன் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இத்திட்டத்தை செயல்படுத்த, 5 லட்சம் ரூபாயை அனுப்பிய கோவை தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர், லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்த அதிகாரிகள், லஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரியும் சிலர், இந்த வழக்கில் விசாரணை வளையத்திற்குள் வருகின்றனர். இவர்கள் அனைவரது போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்ததில், சரவண பாபுவை சிக்க வைக்க ஒரு மாதமாக திட்டமிட்டதும், அதற்காக வாட்ஸாப் குழு ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது. அலுவலகத்தில் இரவு பணம் வைக்க வருபவர், அதிகாரி இல்லாத நேரத்தில் பகலில் வரவழைக்கப்பட்டு, அலுவலக துணை இயக்குநர் அறைக்கு எப்படி செல்ல வேண்டும் என, திட்டமிடப்பட்டுள்ளது. துணை இயக்குநர் அலுவலக அனைத்து சாவிகளும் தினமும் மாலை, 6:00 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். மறுநாள் அங்கிருந்து சாவியை கொண்டு வந்து திறப்பர். அதை பயன்படுத்தி, தீயணைப்பு வீரர்கள் அந்த சாவியை போல மாற்றுச்சாவி தயார் செய்து, அதை பணம் வைத்த விஜயிடம் கொடுத்துள்ளனர். தீ யணைப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விசாரணை விரைவாக நடப்பதாகவும், விரைவில் முக்கிய ஆதாரங்கள் அடிப்படையில் தொடர்புள்ள அதிகாரிகள் அனைவரும் கைது செய்யப்படுவர் எனவும், போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி தெரிவித் தார்.