பணியிடங்கள் நிரப்புதல் குறித்த தகவல் தர கல்லுாரிக்கு தகவல் ஆணையம் உத்தரவு
திருநெல்வேலி:அரசு உதவி பெறும் கல்லூரியில் பணியிடங்கள் நிரப்புதல் குறித்த தகவல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி வழங்க வேண்டும் என தகவல் ஆணையர் டாக்டர் கே.திருமலைமுத்து உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் கல்லூரி தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி உள்ளது. அங்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நடந்த நியமனங்களில் வெளிப்படை தன்மை இல்லை. வாட்ச்மேன், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணியிடங்களில் தற்காலிகமாக நியமிக்கப்படுபவர்கள் பின்னர் அரசு அனுமதி பெறாமல் நிரந்தர பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் 2022 செப்டம்பர் 22-ல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தூய சவேரியார் கல்லூரிக்கு பணியிடங்கள் நிரப்புதல் குறித்த விவரங்களை கேட்டிருந்தார். ஆனால் பொது தகவல் அலுவலரான கல்லூரி முதல்வர் தகவல்களை தரவில்லை. இதுகுறித்து மேல்முறையீடு செய்யப்பட்டது. திருநெல்வேலி கல்லூரி கல்வி இணை இயக்குனர், மனுதாரர் கேட்ட விபரங்களை தகவல்களை தெரிவிக்குமாறு கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டார். இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த தகவல்களையும் தராமல் கல்லூரி நிர்வாகம் மறுத்து வந்தது. சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்ததில் மனுதாரர் கேட்கும் விபரங்களை 15 தினங்களுக்குள் தூய சவேரியார் கல்லூரி தகவல் அலுவலர் முதல்வர், முழுமையாக தர வேண்டும் என தகவல் ஆணையர் திருமலைமுத்து உத்தரவிட்டுள்ளார்.