திருநெல்வேலி : திருநெல்வேலியில், தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவுநீர் கலக்கும் பகுதிகளை நேற்று ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், பி.புகழேந்தி ஆகியோர், ஆற்றை, 'மேலோட்டமாக மேக்கப்' செய்த அதிகாரிகளுக்கு, 'டோஸ்' விட்டனர். ஆற்றை முழுமையாக பாதுகாக்க, செயல் வரைவு திட்டத்தை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை குறித்து அறிய, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர், நேற்று திருநெல்வேலியில் ஆய்வு மேற்கொண்டனர். வண்ணாரப்பேட்டை சுற்றுலா மாளிகையில் கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, டி.ஆர்.ஓ., சுகன்யா உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். என்ன திட்டம்?
பின், சாக்கடை கழிவுநீர் கலக்கும் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர். ஜங்ஷன் மீனாட்சிபுரம் பகுதியில் சாக்கடை நீர், ஆற்றில் கலக்காமல் இருக்க சிமென்ட் தொட்டி போல அமைக்கப்பட்டதை பார்வையிட்டனர்.நீதிபதிகள் வருவதால் அங்கு வெள்ளையடிக்கப்பட்டு சீரமைப்பு பணி நடந்திருந்தது. அதை கவனித்த நீதிபதி சுவாமி நாதன், ''ஏன் இந்த, 'மேக்கப்' செய்துள்ளீர்கள். இத்தனை, 'பில்டப்' ஏன்? நீதிபதிகள் வரமாட்டார்கள் என நினைத்துக் கொண்டீர்களா?,'' என்றார்.மேலும், 'தாமிரபரணியை பாதுகாக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?' என, நீதிபதிகள் அதிகாரிகளிடம் கேட்டனர். மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா அறிக்கை குறித்து கூறினார். இதுபோன்ற அறிக்கைகளை கேட்டு காது புளித்து விட்டதாக கூறிய நீதிபதிகள், 'தாமிர பரணியை பாதுகாக்கும் திட்டங்களை முறையாக செயல்படுத்துங்கள்' என்றனர். கலெக்டருக்கு உத்தரவு
பல பகுதிகளை ஆய்வு செய்த பின், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் பழங்கால மண்டபங்கள், படித்துறைகளை சீர் செய்ய அறிவுறுத்தினர்.தாமிரபரணியில், பாபநாசம் முதல் ஆத்துார் வரை பல்வேறு இடங்களில் சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. நேற்றைய ஆய்வு, திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நடந்ததால் மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா சிக்கிக்கொண்டார்.ஆய்வின் போது அடிக்கடி கைக்கடிகாரத்தை பார்த்த கமிஷனர் சுகபுத்ராவிடம், 'என்ன 'வாட்ச்'சை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்; நேரமாகிவிட்டதா; இன்று அனைத்து இடங்களையும் பார்த்த பிறகு தான் மதிய உணவு' என்றனர் நீதிபதிகள்.நிறைவாக நீதிபதிகள், 'தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 'இதை முழுமையாக நிறைவேற்ற தேவைப்படும் நிதி ஒதுக்கீடு, கால அவகாசம் ஆகியவற்றை உள்ளடக்கிய வரைவு செயல் திட்டத்தை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.