உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / லாரி டிரைவர் விஷம் குடித்து இறந்த விவகாரம்: போராட்டத்தால் வீடு ஜப்தி நடவடிக்கை ரத்து; ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உறுதி

லாரி டிரைவர் விஷம் குடித்து இறந்த விவகாரம்: போராட்டத்தால் வீடு ஜப்தி நடவடிக்கை ரத்து; ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உறுதி

திருநெல்வேலி; துாத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் வீடு ஜப்தி செய்யப்பட்டதால் லாரி டிரைவர் விஷம் குடித்து பலியானார். இதையடுத்து கிராமத்தினரின் சாலை மறியல் போராட்டத்தால் ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது. ரூ. 10 லட்சம் இழப்பீடும் வழங்க நிறுவனத்தினர் உறுதியளித்தனர்.வல்லநாடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கரன் 45. லாரி டிரைவர். மனைவி பத்திரகாளி, 36. பிளஸ் 2 படிக்கும் மகள் பானு 18; பத்தாம் வகுப்பு படிக்கும் மகன் கல்யாணி 16, உள்ளனர். இவர் 'ஆப்டஸ் பைனான்ஸ்' தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டை அடமானம் வைத்து மனைவி பெயரில் ரூ. 5 லட்சம் கடன் பெற்றிருந்தார். மாதம்தோறும் ரூ. 11 ஆயிரம் வீதம் திரும்ப செலுத்தி வந்தார். தொடர்ந்து கடன் பாக்கி செலுத்தாததால் தனியார் நிதி நிறுவனத்தினர் நீதிமன்றத்தை அணுகி வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பெற்றனர். நேற்று முன்தினம் போலீஸ் அதிகாரிகள் உட்பட 25க்கும் மேற்பட்ட போலீசார் உடன் சென்று தனியார் வங்கி நிறுவனத்தினர் வீட்டை ஜப்தி செய்தனர். பொருட்களை எடுத்து வெளியே போட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணவன், மனைவி போலீஸ் முன்பாக விஷம் அருந்தினர்.இருவரும் தப்பிக்க விஷம் குடித்து நாடகமாடுகின்றனர் எனக் கூறி அவர்களை 45 நிமிடங்களுக்கு மேலாக மீட்பதற்கு போலீசார் உட்பட யாரும் முன்வரவில்லை. சிறிது நேரத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சங்கரன் பலியானார். பத்திரகாளி சிகிச்சையில் உள்ளார். முறப்பநாடு போலீசார் விசாரித்தனர்.

கிராமத்தினர்

இந்த சம்பவத்தில் லாரி டிரைவர் இறப்பிற்கு போலீசார் தான் காரணம் எனக் கூறி பெண்கள், உறவினர்கள் திருநெல்வேலி - - துாத்துக்குடி சாலையில் வல்லநாட்டில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கரன் மகன், மகள் பங்கேற்றனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னா சங்கர், டி.எஸ்.பி.,ராமகிருஷ்ணன் பேசி சமாதானப்படுத்தினர்.சங்கரன் இறந்ததால் அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க 'ஆப்டஸ் பைனான்ஸ் 'நிறுவனம் முன் வந்தது. இதன்படி மகன், மகளுக்கு தலா ரூ.4 லட்சம், பத்திரகாளிக்கு ரூ. 2 லட்சம் தருவது என முடிவு செய்யப்பட்டது. ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டு வீட்டின் சாவி சங்கரன் சகோதரரிடம் தரப்பட்டு வீடு திறந்து ஒப்படைக்கப்பட்டது. இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி