உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லையில் கொட்டிய மருத்துவ கழிவுகள்; 18 லாரிகளில் கேரளாவுக்கு அனுப்பிவைப்பு

நெல்லையில் கொட்டிய மருத்துவ கழிவுகள்; 18 லாரிகளில் கேரளாவுக்கு அனுப்பிவைப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே கோடகநல்லுார், நடுக்கல்லுார், முக்கூடல், மேலத்திடியூர் பகுதிகளில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவ மையத்தின் கழிவுகள் மூட்டை மூட்டையாக லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்பட்டன. முதன்முதலில் நம் நாளிதழ் இதுகுறித்து செய்தி வெளியிட்டது. இதன் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், கழிவுகளை கேரளாவுக்கே எடுத்துச் செல்ல வேண்டும் என, மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, கேரள மாநில அதிகாரிகள், திருவனந்தபுரம் மாநகராட்சி சுகாதார அதிகாரி கோபகுமார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பின்சி உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். திருநெல்வேலி கலெக்டரை சந்தித்து பேசினர். அப்போது, கலெக்டர் கார்த்திகேயன், கழிவுகளை மீண்டும் கேரளத்திற்கு எடுத்துச் செல்ல வலியுறுத்தினார்.இதையடுத்து, நேற்று காலை கேரள மாநில அதிகாரிகள் உட்பட 50 அலுவலர்கள் 18 டாரஸ் லாரிகள், அதற்குரிய பணியாளர்களுடன் திருநெல்வேலி வந்தனர். திருவனந்தபுரம் மாவட்ட உதவி கலெக்டர் சாக்சி மோகன், சுகாதாரத்துறை அலுவலர் கோபக்குமார் ஆகியோர் தலைமையில் 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திருநெல்வேலி நடுக்கல்லுார் அரசு பள்ளியில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.இதில், சேரன்மகாதேவி சப் கலெக்டர் அர்பித் ஜெயின், பயிற்சி கலெக்டர் அம்பிகா ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனைக்கு பிறகு கேரள அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து பழவூர், நடுக்கல்லுார், கோடகநல்லுார், முக்கூடல் போன்ற பகுதியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை டாரஸ் லாரிகளில் ஏற்றினர்.திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:திருநெல்வேலியில் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவ கழிவுகள் அகற்றுவதில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவில், தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளது. கேரள அரசும் ஒத்துழைக்கிறது. இதுவரை, 18 லாரிகளில் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.ஐந்து இடங்களில் கழிவு கொட்டப்பட்டது தொடர்பாக, ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கழிவுகளை கொண்டு வர துணையாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள எல்லையில் உள்ள கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட சோதனை சாவடிகளில் மிகுந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி, கேரள மாநிலமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும்.இவ்வாறு தெரிவித்தார்.குப்பை அள்ளப்பட்ட 18 லாரிகளில், முதற்கட்டமாக 10 லாரிகள் நேற்று இரவு போலீஸ் பாதுகாப்புடன் தமிழக எல்லை வரை கொண்டு சென்று விடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை